7 எம்.எல்.ஏ.க்களும் வாரிய தலைவர் பதவிக்கு தகுதியானவர்களா? சாமிநாதன் கேள்வி
7 எம்.எல்.ஏ.க்களும் வாரிய தலைவர் பதவிக்கு தகுதியானவர்களா? என்று மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுச்சேரி,
7 எம்.எல்.ஏ.க்களும் வாரிய தலைவர் பதவிக்கு தகுதியானவர்களா? என்று மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பி உள்ளார். புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுவை மாநிலத்தில் மிகுந்த நஷ்டத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வாரிய தவைவர்களை நியமித்ததன் மூலம் பல ஆண்டுகளாக மக்களின் வரிப்பணம் பல கோடி விரயமானது. இதனை மக்களின் நலன்கருதி கவர்னர் ரத்து செய்தார். ஆனால் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா தவறான வழிகாட்டுதலின்பேரில் மீண்டும் எம்.எல்.ஏ.க்களை வாரிய தலைவர்களாக நியமித்துள்ளார்.
மக்கள் நலன்கருதி வாரிய தலைவர்கள் நியமனத்தை ரத்துசெய்யக்கோரி மத்திய உள்துறைக்கு கவர்னர் கடிதம் அனுப்பி உள்ளார். ஏற்கனவே புதுவை மாநிலம் நிர்வாக சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது. வாரிய தலைவர்களால் மக்களுடைய வரிப்பணம் மேலும் விரயம் ஆவதை பாரதீய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது.
மத்திய அரசுடன் மோதல்போக்கு, சபாநாயகரின் அடாவடித்தனம், முதல்–அமைச்சரின் சரியான அணுகுமுறை இல்லாததால் புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் முடங்கிப்போனதற்கு ஆளுங்கின்ற அரசே காரணம். 7 எம்.எல்.ஏ.க்களும் அந்தந்த வாரியத்துக்கு தகுதியானவர்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மிகுந்த நஷ்டத்திற்கு இயங்கி வரும் வாரியத்திற்கு தலைவர் எதற்கு? என்று கேட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். கவர்னரின் நடவடிக்கைக்கு புதுவை பாரதீய ஜனதா ஒத்துழைப்பு அளிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாதவர்களை வாரிய தலைவர்களாக நியமித்ததன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.100 கோடிக்கு மேல் விரயமானது.
இந்தநிலையில் ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கின்ற வகையில் வீட்டுவரி, குடிநீர் வரியை பல மடங்கு உயர்த்தி இருப்பதை மக்கள் உணரவேண்டும். துறைவாரியாக கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஆய்வு செய்ய கவர்னருக்கு பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை வைக்கிறது. பல்வேறு நிதி சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும். பல ஊழல்களை வெளிப்படையாக தெரியப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பாரதீய ஜனதா கட்சியின் குறிக்கோள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.