தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்


தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 8 Nov 2017 5:00 AM IST (Updated: 8 Nov 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

வண்டலூர்,

சென்னையை அடுத்த தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

முதலாவதாக தாம்பரம்-முடிச்சூர் சாலை, கிருஷ்ணா நகர், கண்ணன் அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து, முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

நிவாரண உதவிகள்

அப்போது வரதராஜபுரம் பகுதியில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடிக்கு சென்று அங்கிருந்தவாறு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுவட்டார பகுதிகளையும், அந்த வழியாக செல்லக்கூடிய அடையாறு மழை நீர் கால்வாய்களையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

பின்னர் பெருங்களத்தூர் அரசு பள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி உள்ள நிவாரண முகாமிற்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு உள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அப்போது மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஆலந்தூர் எம்.எல்.ஏ.வுமான தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ.க்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி மற்றும் பெருங்களத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.சேகர் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.

அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி மற்றும் வேளச்சேரி ஏரியை பார்வையிட்டார்.

ரூ.19 கோடி நிதி எங்கே?

முன்னதாக மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முடிச்சூர், வரதராஜபுரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்வள ஆதாரங்களை சீர்படுத்துவதற்காக ரூ.19 கோடி நிதி ஒதுக்கி, கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி பணிகள் தொடங்கப்பட்டன.

45 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த வித பணிகளும் நடைபெறவில்லை என்பது தான் உண்மை. ஆகவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.19 கோடி என்ன ஆனது என்பது கேள்விக்குறி.

ஆட்சி மாற்றம் ஏற்படும்

இந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 7 வருடமாக இருக்கிற அ.தி.மு.க. அரசு ஏன் அந்த பணியை செய்யவில்லை என்பது என்னுடைய கேள்வி.

தற்போதைய அரசு மக்கள் கவலைகளை கவனத்தில் கொள்ளவில்லை. வரும் காலக்கட்டத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story