வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது அமைச்சர் பேட்டி


வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 8 Nov 2017 4:00 AM IST (Updated: 8 Nov 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதிக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரி காவேரிப்பாக்கம் ஏரியாகும். இந்த ஏரி 3 ஆயிரத்து 968 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட உயரம் 30.65 அடியாகும். தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உள்ளது. தற்போது வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் இதுவரை 15 ஏரிகள் நிரம்பி உள்ளன. மேலும் புதுப்பட்டு, கங்காதரநல்லூர், வாங்கூர், கோவிந்தசேரி ஆகிய ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. மேலும் தற்போது மகேந்திரவாடி ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. விரைவில் மகேந்திரவாடி ஏரியும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் காவேரிப்பாக்கம் ஏரியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் பார்வையிட்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஏரியின் தன்மை, ஏரி கரையின் உறுதித்தன்மை ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதிக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. ஏரியில் படகுத்துறை அமைத்து, சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். பருவ மழை குறித்து முன் எச்சரிக்கையாக வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆம்பூர், வாணியம்பாடி பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பருவ மழை தொடங்கும் முன்பே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் இந்தப் பருவ மழையால் வேலூர் மாவட்டத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. மனிதாபிமான அடிப்படையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அப்போது கலெக்டர் ராமன், நீர்வள ஆதாரத்துறை சிறப்பு தலைமை பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், காவேரிப்பாக்கம் உதவி பொறியாளர் சந்திரன், பனப்பாக்கம் உதவி பொறியாளர் மெய்யழகன், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், நெமிலி தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் சந்தியா, கிராம நிர்வாக அலுவலர் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து காவேரிப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு காவேரிப்பாக்கம், மின்னல், பாணாவரம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 729 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார். விழாவில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story