ரூ.3 கோடி மோசடி செய்ததாக வழக்கு: நத்தம் விசுவநாதனுக்கு எதிராக தாக்கல் செய்த மனு தள்ளுபடி


ரூ.3 கோடி மோசடி செய்ததாக வழக்கு: நத்தம் விசுவநாதனுக்கு எதிராக தாக்கல் செய்த மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 8 Nov 2017 4:30 AM IST (Updated: 8 Nov 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

ரூ.3 கோடி மோசடி செய்ததாக நத்தம் விசுவநாதன் மீது பதிவு செய்த வழக்கை போலீசார் ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள என்.பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் சபாபதி. இவர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தன்னிடம் ரூ.2 கோடியே 97 லட்சத்து 90 ஆயிரத்து 700–ஐ மோசடி செய்துவிட்டதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிவில், அந்த புகாரில் உண்மையில்லை என்றும், வழக்கை ரத்து செய்வதாகவும் திண்டுக்கல் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதை எதிர்த்து அதே கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்த சபாபதி, இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருந்தவர்களிடம் கோர்ட்டே விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. நத்தம் விசுவநாதன் தரப்பில் வக்கீல் கண்ணப்பனும், சபாபதி தரப்பில் வக்கீல் சிவக்குமாரும் வாதாடி வந்தனர்.

நத்தம் விசுவநாதனின் வளர்ச்சியை தடுக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், போலீசார் முறையாக விசாரித்து வழக்கை முடித்து இருப்பதாகவும் வக்கீல் கண்ணப்பன் வாதாடினார். அதே வேளையில், நத்தம் விசுவநாதன் அரசியல் செல்வாக்கு மிக்கவர். அரசியல் நிர்பந்தம் காரணமாகவே முறையான விசாரணையின்றி போலீசார் வழக்கை முடித்து வைத்துள்ளனர் என வக்கீல் சிவக்குமாரும் வாதாடினார்.

இதுதொடர்பாக நேற்று தீர்ப்பு விவரம் அறிவிக்கப்படும் என ஏற்கனவே கோர்ட்டு தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று சபாபதி மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, சபாபதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் தீர்ப்பு கூறினார். இதற்கிடையே, இதுதொடர்பாக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக சபாபதி தரப்பு வக்கீல் சிவக்குமார் தெரிவித்தார்.


Next Story