மாவட்டத்தில், இதுவரை 256 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை கலெக்டர் தகவல்


மாவட்டத்தில், இதுவரை 256 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Nov 2017 4:00 AM IST (Updated: 8 Nov 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 256 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜனஅள்ளி பேரூராட்சி, வேலம்பட்டி, வேங்கனூர் மற்றும் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லப்பநாயக்கனூர் ஊராட்சியில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை மாவட்ட கலெக்டர் கதிரவன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பிறகு அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரையில் கிராமங்களில் 156 பேருக்கும், நகர் பகுதியில் 100 பேருக்கும் என மொத்தம் 256 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு அரசு ஆரம்ப சுகாதர நிலையம், அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலம் பெற்றுள்ளனர்.

ரூ.22 லட்சம் அபராதம்

பொதுமக்கள் சுகாதார தூய்மை பணிகளுக்கு முழுஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். சுகாதார பணிகளை மேற்கொள்ளாத வீடுகள், அங்காடிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது நோக்கமல்ல.

பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதுபோன்ற அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிகிச்சை பெறவேண்டும்

பொதுமக்கள் காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் இருக்கும்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களின் வீடுகள், சுற்றுபுறத்தை துாய்மையாக வைத்துக்கொண்டாலே வைரஸ் நோய் தொற்றுகளில் இருந்து விடுபடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கடையை மூட உத்தரவு

தொடர்ந்து வேலம்பட்டி, வேங்கனூர் மற்றும் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட நல்லப்பநாய்க்கனூர் ஊராட்சியில் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வீடுகளில் தேவையற்ற பொருட்களை தூய்மை பணியாளர்களை கொண்டு அகற்றும் பணிகளை கலெக்டர் கதிரவன் பார்வையிட்டார். வேலம்பட்டி பேரூராட்சி பகுதியில் சீனன் என்பவரது வீட்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி சுகாதாரமற்ற முறையில் இருந்ததையடுத்து அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். தொடர்ந்து காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் தம்ளர்கள் மற்றும் பேப்பர் கப் விற்பனை செய்த கடையில் ஆய்வு மேற்கொண்டு அவற்றை பறிமுதல் செய்து கடையை மூட உத்தரவிட்டார்.

ஆய்வின்போது வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) மணிவண்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் நடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவகி, பையாஸ்அகமது, பேரூராட்சி உதவி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story