சேலம் 5 ரோடு பகுதியில் மேம்பாலம் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை கலெக்டர் ஆய்வு


சேலம் 5 ரோடு பகுதியில் மேம்பாலம் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Nov 2017 4:30 AM IST (Updated: 8 Nov 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

சேலம் 5 ரோடு பகுதியில் கட்டப்படும் மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.

சேலம்,

சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ், ஏ.வி.ஆர். ரவுண்டானா, குரங்குச்சாவடி, 5 ரோடு, 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரூ.320 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணிகள் இரவு, பகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சில இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி காரணமாக நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மேம்பாலங்கள் கட்டும் இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சேலம் 5 ரோடு பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகள் அவருக்கு வரைபடம் மூலம் நிலம் கையகப்படுத்தப்படும் இடங்களை விளக்கி கூறினார்கள். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், சேலம் உதவி கலெக்டர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் ரோகிணி சேலம் மாவட்டம் அருநூத்துமலை பகுதியில் ஊரக வளர்ச்சி, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். ஆலடிப்பட்டி ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இயங்கும் உண்டு உறைவிட பள்ளி, தங்கும் விடுதி, சமையல் கூடம் ஆகியவை முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மழை பெய்து வரும் சூழ்நிலையில் மழைநீர் தேங்கி காய்ச்சல் ஏற்படுத்தும் கொசுகள் உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் இன்னும் கூடுதலாக இந்த பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மேலும் உயர் அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் தங்களுடைய பணியின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து அறிக்கைகள் அளித்திட வேண்டும்.

அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். மருந்து மாத்திரைகள் வழங்குவதில் காலதாமதம் இருக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் கனகராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story