பாம்பு கடித்து வங்கி அதிகாரி மகன் சாவு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்
அஞ்சுகிராமம் அருகே நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பாம்பு கடித்து வங்கி அதிகாரி மகன் பரிதாபமாக இறந்தார். வங்கி அதிகாரி மகன் அஞ்சுகிராமம் அருகே ஜேம்ஸ்டவுன் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர். இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் உதவி மோல
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமம் அருகே ஜேம்ஸ்டவுன் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர். இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் உதவி மோலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் வினோத் (வயது27). பன்னீர் சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி சுசீந்திரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வினோத், தனது நண்பர் சதீஷ் (24) என்பவருடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை சதீஷ் ஓட்டி சென்றார். வினோத் பின்னால் அமர்ந்திருந்தார்.
பாம்பின் மீது ஏறியதுஇவர்கள் அஞ்சுகிராமம் புதுக்குடியிருப்பு ஊர் பக்கம் சென்றபோது அந்த பகுதியில் லேசாக மழை பெய்தது. மேலும், சாலையின் குறுக்கே ஒரு விஷம்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் பாம்பின் மீது ஏறி நிலைதடுமாறியது. உடனே, மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நண்பர்கள் இருவரும் கால்களை தரையில் ஊன்றினர்.
அப்போது, பின்னால் அமர்ந்திருந்த வினோத் தனது காலை பாம்பின் தலைமீது ஊன்றிவிட்டார். இதை உணர்ந்த அவர் காலை வேகமாக தூக்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில், பாம்பு வினோத்தின் காலை கடித்தது.
இதனால், வலியால் அலறிதுடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அஞ்சுகிராமத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் வினோத் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.