பயிர் காப்பீடு செய்வதற்காக வங்கிகளில் குவிந்த விவசாயிகள்


பயிர் காப்பீடு செய்வதற்காக வங்கிகளில் குவிந்த விவசாயிகள்
x
தினத்தந்தி 9 Nov 2017 4:15 AM IST (Updated: 9 Nov 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அதிக அளவில் வருவதால், கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காளையார்கோவில்,

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்ய வருகிற 30–ந்தேதி கடைசி நாளாகும். இந்தநிலையில் பயிர் காப்பீடு செய்வதற்காக கூட்டுறவு வங்கிகளில் புதிய கணக்கு தொடங்குவதற்கும், பழைய கணக்குகளில் பயிர் காப்பீட்டு தொகை கட்டுவதற்கும் ஏராளமான விவசாயிகள் தற்போதே வங்கிகளில் அலைமோதி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் விவசாயிகள் நெற்பயிர்களை சாகுபடி செய்யவில்லை. சாகுபடி செய்த நெற்பயிர்களும் தண்ணீரின்றி கருகி போனது. இந்த ஆண்டு கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சிவகங்கையில் ஓரளவு மழை பெய்தது. அந்த மழைநீரை பயன்படுத்தி விவசாய பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. இதேபோல் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியிருப்பதால், அதனை நம்பி ஏராளமான விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பயிர் காப்பீடு செய்வதற்காக அனைத்து வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகள் குவிந்து வருகின்றனர். காளையார்கோவில், மானாமதுரை, காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கூட்டம் அதிகமானதால், பல்வேறு வங்கிகளில் மணிக்கணக்கில் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர். சில இடங்களில் வங்கிகளில் அலுவலர்கள் வருவதற்கு முன்பே விவசாயிகள் வங்கிகள் முன்பு காத்து நிற்கின்றனர்.

எனவே பயிர் காப்பீட்டு தொகை செலுத்தும் விவசாயிகளின் நலன் கருதி வங்கிகளில் கூடுதல் கவுண்ட்டர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story