ஸ்மார்ட்கார்டு கிடைக்கப் பெறாதவர்கள் விடுபட்ட விவரங்களை ரேஷன் கடைகளில் பதிவு செய்யலாம்
ஸ்மார்ட் கார்டு கிடைக்கப் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் விடுபட்ட விவரங்களை ரேஷன்கடைகளில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தின்கீழ் 8 லட்சத்து 74 ஆயிரத்து 796 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 7 லட்சத்து 32 ஆயிரத்து 451 ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 345 குடும்பஅட்டைகளில் குடும்ப தலைவர் புகைப்படம், பிறந்த தேதி, குடியிருப்பு முழுமையான முகவரி போன்றவை இல்லாத காரணங்களால் ஸ்மார்ட் கார்டு அச்சிட்டு வழங்க முடியாமல் உள்ளது.
எனவே அவ்வாறுள்ள குடும்பஅட்டைகளுக்கு நவம்பர் மாதத்திற்குள் (இந்தமாதம்) ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட வேண்டும். அதனால் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து விடுபட்ட விபரங்களை பெற்று இணையதளத்தில் பதிவுசெய்யும் பணியை வருகிற 15–ந்தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன்கடையிலும் குடும்பஅட்டை வாரியாக பதிவுசெய்யப்பட வேண்டிய திருத்த விபரங்கள் பட்டியலிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஸ்மார்ட் கார்டு கிடைக்கப்பெறாதவர்கள் தங்களுக்குரிய ரேஷன்கடை விற்பனையாளரை அணுகி தங்களது பழைய குடும்ப அட்டைக்குப்பதிலாக புதிய ஸ்மார்ட்கார்டு அச்சிட தேவைப்படும் கூடுதல் விபரங்களை அளித்து புதிய ஸ்மார்ட் கார்டைபெற்றுக்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.