மத்திய அரசை கண்டித்து ஊட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து ஊட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி,
பணமதிப்பு நீக்க நடவடிக்கை செய்த மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து நேற்று நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருப்பு பட்டை அணிந்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. பேசியதாவது:–
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந் தேதி பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் செய்து மத்திய பா.ஜனதா அரசு உத்தரவு பிறப்பித்தது. அப்போது நீலகிரி மாவட்டத்துக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளும், வனப்பகுதியை ஒட்டி வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைகளில் கடன் கேட்கக்கூடிய அவலநிலை ஏற்பட்டது. பணமிருந்தும் கடனாளிகளாகவே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலை மாற பல மாதங்கள் பிடித்தன. எனவே, மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ரவிக்குமார், வட்டார தலைவர்கள் பில்லன், ராமச்சந்திரன், சுப்பிரமணி, நகர தலைவர் கெம்பையா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அமைப்பு தலைவர் அழகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.