போக்குவரத்துத்துறை நிதி பற்றாக்குறையை அரசு மானியமாக வழங்க வேண்டும்
போக்குவரத்துத்துறை நிதி பற்றாக்குறையை அரசு மானியமாக வழங்க வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடந்த ஏ.ஐ.டி.யு.சி. பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ஆர்.எஸ். சாலையில் உள்ள என்.எஸ்.கம்யூனிட்டி ஹாலில் ஏ.ஐ.டி.யு.சி. 25–ம் ஆண்டு பேரவை பொதுக்கூட்டம் நடந்தது. மாநில சம்மேளன துணை தலைவர் ரவிமுருகன் தலைமை தாங்கி பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் ஜெயமணி முன்னிலை வகித்து தொடக்க உரை ஆற்றினார். மத்திய சங்க தலைவர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக சங்கத்தின் நிறுவனர் அப்துல் ரகீம் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில், போக்குவரத்துத்துறை வரவு–செலவு பற்றாக்குறையை அரசு மானியமாக வழங்க வேண்டும். 13–வது ஊதியக்குழு பரிந்துரையின்படி போக்குவரத்து ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். 1–4–2003–ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு அரசே ஓய்வூதிய திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும்.
அனைத்து போக்குவரத்துக்கழக பணிமனைகளையும் பொதுப்பணித்துறை என்ஜினீயர் மூலம் ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டை–உடைசல்களுடன் இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களையும் மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து மாவட்ட தலைவர் தலைமையில் என்.எஸ்.கம்யூனிட்டி ஹாலில் இருந்து பேரணியாக சென்றனர். இந்த பேரணி நாகல்நகரில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமணை முன்பு முடிவடைந்தது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். முடிவில் மத்திய சங்க செயலாளர் லெனின் நன்றி கூறினார். பேரணியில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.