தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
தீர்த்தமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் விவேகானந்தன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா தீர்த்தமலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் கடந்த 1.4.2017–முதல் தற்போது வரை ரூ.63 லட்சத்து 5 ஆயிரம் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் மூலம் ரூ.80 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதே போன்று 70 பேருக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.45 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் தீர்த்தமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயிர்கடன் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரங்கள் குறித்த விவரங்களை அவர் ஆய்வு செய்தார்.
பயிர் காப்பீட்டு திட்டம்இதை தொடர்ந்து சங்கத்தில் விவசாயிகள் பயிர்கடன் பெறுவதற்கு வழங்கிய மனுக்களையும், பொருட்கள் இருப்பு ஆகியவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார். நடப்பு சம்பா சாகுபடி பருவத்தில் பிரதான் மந்திரி பயிர்காப்பீட்டு திட்டம் மற்றும் பயிர்கடன் பெறும் உறுப்பினர்களிடமிருந்து பிரிமீயம் தொகை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட சங்க பணியாளர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்தானம், வேளாண்மை இணை இயக்குனர் சுசீலா, கூட்டுறவு துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் சம்பத்குமார், கள அலுவலர் ஆனந்த் மற்றும் பலர் உடனிருந்தனர்.