கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள், சாமி படங்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள், தங்களது கைகளில் சாமி படங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வருவதற்கு வசதியாக மாற்றுத்திறனாளியுடன் ஒருவர் செல்வதற்கு சிறப்பு அடையாள அட்டை வழங்க கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சாமிகளின் உருவ படங்களை கையில் பிடித்தபடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதில் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மகளிர் அணி தலைவி சித்ரா, பகுதி தலைவர்கள் ஆறுமுகம், ஜெயபாலன், பாலமுருகன், தில்லைநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றால் மாற்றுத்திறனாளிகளை மக்களோடு மக்களாக வரிசையில் வரும்படி கோவில் ஊழியர்கள் கூறுகிறார்கள். அடையாள அட்டையை காண்பித்தாலும் அனுமதி மறுக்கிறார்கள். எனவே அனைத்து இந்து கோவில்களிலும் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வருவதற்கு வசதியாக மாற்றுத்திறனாளியுடன் துணையாளர் ஒருவரை உடன் அழைத்து செல்ல சிறப்பு அட்டை ஒன்று வழங்க வேண்டும். இதை அனைத்து கோவில்களிலும் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.