மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 15 லட்சம் பேர் வேலையை இழந்து தவிக்கிறார்கள்


மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 15 லட்சம் பேர் வேலையை இழந்து தவிக்கிறார்கள்
x
தினத்தந்தி 9 Nov 2017 4:30 AM IST (Updated: 9 Nov 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் 15 லட்சம் பேர் வேலை இழந்து தவித்து வருவதாக சேலத்தில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று சேலம் பழைய நாட்டாண்மை கழக அலுவலகம் முன்பு மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகவும், அதற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப் பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் என்றென்றும் மக்களோடும், அவர்கள் வாழ்வோடும், இன்ப, துன்பங்களிலும் இணையாக பயணம் செய்யும் இயக்கமாகும். கடந்தாண்டு நவம்பர் 8-ந்தேதி ஒட்டு மொத்த இந்தியாவும் ஒரு போர்க்காலத்தை சந்தித்ததுபோல இருந்தது. அதை யாரும் மறக்க முடியுமா?, ஆனால், இதை எதையும் கண்டுகொள்ளாமல் மாநிலத்தில் ஆளில்லாத அரசும் நடந்து வருகிறது.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, தெரிந்துதான் அமைச்சர்களை பேச விடாமல் செய்துள்ளார். இப்போது அந்த அறிவாளிகள் யாரெல்லாம் கண்டுபிடிக்க முடியாத கண்டுபிடிப்புகளையெல்லாம் கண்டுபிடித்து வருகிறார்கள்.

நாட்டின் பிரதமர் மன் மோகன்சிங் என்றும், தமிழக முதல்-அமைச்சர் மதுசூதனன் என்றும் பேசியதை அனைவரும் அறிந்ததே. ஆட்சியில் இருக்கும் அத்தனை அமைச்சர்களும் அறிவுஜீவிகள். ஆட்சியை காப்பாற்ற வேண்டிய நிலையில் தமிழக ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

தி.மு.க.வின் இந்த போராட்டம் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படவில்லை. மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கடந்த 6 மாதத்தில் 15 லட்சம் பேர் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள். சிறு, குறு தொழிற்சாலைகள் பல மூடப்பட்டன. நல்லவர்களின் கையில் ஆட்சி இருந்தால் நாடு நன்றாக இருக்கும். தற்போதுள்ள மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனுக்கான அரசுகள் அல்ல. நாட்டின் போக்கும் சரியில்லை. அது மாறும். அது மாறவேண்டும் என்றால் உதயசூரியன் உதிக்க வேண்டும்.

கருப்புவானம் கலையும். உதயசூரியன் உதிப்பான். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட பொருளாளர் ஜி.கே.சுபாசு, துணை செயலாளர் ரகுபதி, மாநகர செயலாளர் ஜெயக்குமார், மாணவர் அணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, இளைஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், ஓமலூர் வடக்கு ஒன்றிய மீனவர் அணி துணை அமைப்பாளர் மணி மற்றும் நிர்வாகிகள் நாசர்கான், அண்ணாமலை, பச்சியப்பன், பழனிசாமி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலானவர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். 

Related Tags :
Next Story