பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2017 4:30 AM IST (Updated: 9 Nov 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சியினரும் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்,

பண மதிப்பிழப்பு செய்த மத்திய அரசை கண்டித்து, நவம்பர் 8-ந் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார்.

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் மத்தியமந்திரியுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், கோவி.செழியன், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது:-

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்தியஅரசு எடுத்ததால் நம் நாட்டில் 86 சதவீத மக்கள் தங்களது கையில் வைத்திருந்த பணத்தை இழந்துவிட்டனர். இதேநாளில் தான் மக்கள் நல பணியாளர்களும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிரதமர் மோடி யாருடைய கருத்தையும் கேட்காமல், மத்திய மந்திரிகளை அழைத்து ஆலோசிக்காமல் தானாக எடுத்த முடிவு தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை. கருப்பு பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் கூறினார்.

ஆனால் ரூ.400 கோடி மதிப்புள்ள கள்ளப்பணத்தை ஒழிக்க புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரூ.18 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது திட்டமிட்ட கொள்ளை என்றும், சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட முறைகேடு என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதன்காரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக குறைந்து விட்டது. பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் நிதிமந்திரி யஷ்வந்த்சின்ஹா, சுப்பிரமணியசுவாமி, அருண்சோரி, வங்கி அதிகாரிகள், பொருளாதார அறிஞர்களும் இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்கின்றனர். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் 40 பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, ஒன்றிய செயலாளர் காந்தி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணசாமி வாண்டையார், லோகநாதன், பி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் வக்கீல் கோ.அன்பரசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்பினர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கருப்பு சின்னம் அணிந்து இருந்தனர். பெரும்பாலானோர் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.

முன்னதாக டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறும்போது, சரக்கு மற்றும் சேவை வரி, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்ததை கண்டிக்கும் வகையில் கருப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினால் எடுக்கப்பட்ட முடிவின்படி எல்லோரும் பாராட்டும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். விலைவாசியும் உயருகிறது. சரக்கு மற்றும் சேவை வரியால் நாட்டில் 3 கோடியே 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 27 லட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் என்றார். 

Related Tags :
Next Story