வரலாறு காணாத வகையில் சாம்பார் வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை


வரலாறு காணாத வகையில் சாம்பார் வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை
x
தினத்தந்தி 9 Nov 2017 3:53 AM IST (Updated: 9 Nov 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

வரத்து குறைவால் வரலாறு காணாத வகையில் சாம்பார் வெங்காயம் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாம்பார் வெங்காயத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ.80 வரை அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய், கனி, மலர் மொத்த வியாபாரிகள் நலச்சங்க துணை தலைவர் சுகுமார் கூறியதாவது:-

இந்த சமயத்தில் விளைச்சல் முடிந்து சாம்பார் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் கடந்த ஒரு வாரமாக விளைச்சல் நடைபெறும் பகுதிகளில் மழை பெய்துள்ளதால், விளைச்சல் பாதிக்கப்பட்டு சாம்பார் வெங்காயம் வரத்து பெருமளவில் குறைந்து இருக்கிறது.

ஆத்தூர், நெல்லை, துவரங்குறிச்சி, பண்ருட்டி, ஒட்டன்சத்திரம், சின்னமனூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாளொன்றுக்கு 8 முதல் 10 லாரிகளில் சாம்பார் வெங்காயம் விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது 2 லாரிக்கும் குறைவான அளவே சாம்பார் வெங்காயம் வரத்து இருக்கிறது. இதனால் வரலாறு காணாத வகையில் அதன் விலை ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகள் விலை உயர்வு

சாம்பார் வெங்காயம் தட்டுப்பாட்டை போக்க பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது. மராட்டியம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பேசிக்கொண்டு இருக்கிறோம். அங்கிருந்து வெங்காயம் கொண்டு வரப்பட்டுவிட்டால் விலை கணிசமாக குறையும். தமிழகத்தில் இருந்து வெங்காயம் வரத்தொடங்கினால் தான் பழைய நிலைக்கு திரும்பும்.

இதேபோல், வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் விலையும் அதிகரித்து உள்ளது. தினமும் 300 லாரிகளில் காய்கறிகள் வரத்து இருந்த நிலையில் தற்போது 200 முதல் 220 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தக்காளி, முருங்கைக்காய், அவரைக்காய், பீன்ஸ், கத்தரிக்காய், கேரட் உள்பட பல காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இந்த மாதம் இறுதிவரை இதே நிலை தான் நீடிக்கும். டிசம்பர் மாதம் தொடங்கியதும் காய்கறிகள் விலை குறைய தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

தக்காளி - ரூ.40 முதல் ரூ.60 வரை, பல்லாரி - ரூ.40 முதல் ரூ.50 வரை, கேரட் - ரூ.50 முதல் ரூ.70 வரை, பீன்ஸ் - ரூ.30 முதல் ரூ.60 வரை, அவரைக்காய் - ரூ.40 முதல் ரூ.60 வரை, கத்தரிக்காய் - ரூ.40 முதல் ரூ.60 வரை, வெண்டைக்காய் - ரூ.30 முதல் ரூ.50 வரை, புடலங்காய் - ரூ.20 முதல் ரூ.30 வரை, பாகற்காய் - ரூ.30 முதல் ரூ.40 வரை, சாம்பார் வெங்காயம் - ரூ.160, கொத்தவரங்காய் - ரூ.15 முதல் ரூ.25 வரை, முருங்கைக்காய் - ரூ.50 முதல் ரூ.80 வரை, கோவைக்காய் - ரூ.20 முதல் ரூ.25 வரை, முட்டைக்கோஸ் - ரூ.30 முதல் ரூ.35 வரை, முள்ளங்கி - ரூ.25 முதல் ரூ.35 வரை, உருளைக்கிழங்கு - ரூ.15 முதல் ரூ.20 வரை, மிளகாய் - ரூ.30 முதல் ரூ.40 வரை, பீர்க்கங்காய் - ரூ.20 முதல் ரூ.30 வரை, சவ்சவ் - ரூ.15 முதல் ரூ.20 வரை, பீட்ரூட் - ரூ.40 முதல் ரூ.50 வரை, நூக்கல் - ரூ.50 முதல் ரூ.60 வரை, தேங்காய்(காய் ஒன்று) - ரூ.20 முதல் ரூ.35 வரை, வாழைக்காய்(காய் ஒன்று) - ரூ.5 முதல் ரூ.10 வரை. 

Next Story