விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 கோடி போதைப்பொருள் பறிமுதல் வெளிநாட்டு பெண் கைது


விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 கோடி போதைப்பொருள் பறிமுதல் வெளிநாட்டு பெண் கைது
x
தினத்தந்தி 9 Nov 2017 4:45 AM IST (Updated: 9 Nov 2017 4:45 AM IST)
t-max-icont-min-icon

விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

மும்பை, 

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று பிரேசில் நாட்டில் இருந்து விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்து இறங்கிய வெளிநாட்டு பெண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளில் சோதனையிட்டனர்.

இந்த சோதனையின் போது, அவர் வைத்திருந்த கைப்பைக்குள் 1¾ கிலோ எடை கொண்ட ‘கோகைன்’ என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20 கோடி ஆகும்.

வெளிநாட்டு பெண் கைது

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த வெளிநாட்டு பெண் பயணியை பிடித்து சகார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் வெனிசுலா நாட்டை சேர்ந்த யுரேனா ரோசா மார்ச்சேனா என்பது தெரியவந்தது. அவர் பிரேசில் நாட்டில் இருந்து அந்த போதைப்பொருளை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார்.

அந்த போதைப்பொருள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வினியோகிப்பதற்காக கோவாவை சேர்ந்தவர்களுக்கு கொண்டு செல்ல இருந்ததாகவும் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story