தாளவாடி அருகே பரிதாபம் கோவில் பூசாரியை யானை மிதித்து கொன்றது
தாளவாடி அருகே பரிதாபம் கோவில் பூசாரியை யானை மிதித்து கொன்றது
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள அருள்வாடி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டா (வயது 63). இவர் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள அய்யப்ப சாமி கோவில் பூசாரியாக இருந்தார். மேலும் விவசாயமும் செய்து வந்தார். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் வீட்டின் அருகே உள்ளது. இங்கு அவர் 1½ ஏக்கர் பரப்பளவில் ராகி பயிரிட்டுள்ளார். வனப்பகுதியையொட்டி இவருடைய தோட்டம் அமைந்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு யானை இவருடைய தோட்டத்துக்குள் புகுந்து ராகி பயிரை நாசம் செய்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தாளவாடி வனத்துறையினர் அங்கு சென்று பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டிவிட்டார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நஞ்சுண்டா தனது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். இரவு 11 மணி அளவில் திடீரென்று யானை பிளிறும் சத்தம் கேட்டது. உடனே நஞ்சுண்டா தூக்கத்தில் இருந்து எழுந்து வெளியே சென்று பார்த்தார். அப்போது அவருடைய தோட்டத்தில் யானைகள் கூட்டமாக நின்று பயிரை நாசப்படுத்தி கொண்டிருந்தன.
அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு யானைகளை அங்கிருந்து விரட்ட முயன்றார். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லவில்லை. தோட்டத்தில் அங்கும் இங்குமாக ஓடியபடி பயிரை நாசப்படுத்த தொடங்கின. 1 மணிநேரத்துக்கு பிறகு சில யானைகள் தானாகவே அங்கிருந்து சென்றன.
இதைத்தொடர்ந்து நஞ்சுண்டா தோட்டத்துக்குள் சென்று பார்த்தார். அப்போது தோட்டத்துக்குள் ஒரு யானை மட்டும் மறைவில் நின்று கொண்டிருந்தது. இதனால் அவர் அங்கிருந்து பயந்து ஓடினார். அப்போது கால் இடறி கீழே விழுந்தார். அவரை நோக்கி வேகமாக யானை ஓடி வந்தது. இதில் கீழே விழுந்து கிடந்த அவரை காலால் மிதித்தது. இதில் நஞ்சுண்டா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த நஞ்சுண்டாவின் மனைவி மங்களம்மா ஓடிச்சென்று பார்த்தார். தோட்டத்தில் நஞ்சுண்டா பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தாளவாடி வனச்சரகர் சிவக்குமார் மற்றும் நிலவருவாய் ஆய்வாளர் சுகேந்திரன், கிராம நிர்வாக அதிகாரி சதீஷ் கமல் ஆகியோர் நஞ்சுண்டாவின் வீட்டுக்கு சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் அவருடைய மகனிடம் ஈமச்சடங்கு தொகையாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினர். தகவல் அறிந்தும் தாளவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நஞ்சுண்டாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாளவாடி போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.