வழக்கில் சேர்க்காமல் இருப்பதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஏட்டு கைது


வழக்கில் சேர்க்காமல் இருப்பதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஏட்டு கைது
x
தினத்தந்தி 10 Nov 2017 4:15 AM IST (Updated: 10 Nov 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

வழக்கில் சேர்க்காமல் இருப்பதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.

சரவணம்பட்டி,

கோவை அருகே உள்ள கோவில்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சேகரன். திருட்டு வழக்கு தொடர்பாக இளஞ்செழியன் உள்பட சிலரை பிடித்து விசாரித்து வந்தார். தனக்கும், திருட்டு வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்று இளஞ்செழியன் கூறியுள்ளார். இந்த வழக்கில் சேர்க்காமல் இருப்பதற்காக இளஞ்செழியனிடம் இன்ஸ்பெக்டர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் கனகசபாபதியிடம் இளஞ்செழியன் புகார் செய்தார்.

இந்தநிலையில் இளஞ்செழியன் நேற்று இரவு ரூ.5 ஆயிரம் பணத்துடன் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். லஞ்ச பணத்தை ஏட்டு தனபாலிடம் கொடுக்குமாறு இன்ஸ்பெக்டர் சேகரன் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஏட்டுவிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏட்டுவை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சேகரனும் பிடிபட்டார்.

மேலும் போலீஸ் நிலையத்தில் வேறு எங்கும் லஞ்சப்பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா? என்றும் சோதனை நடத்தப்பட்டது. லஞ்சம் வாங்கியது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 2 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவில் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். லஞ்ச குற்றச்சாட்டில் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு பிடிபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story