தூத்துக்குடி மாநகராட்சியில், பணம் செலுத்திய ஒரே நாளில் புதிய குடிநீர் இணைப்பு இன்று சிறப்பு முகாம் தொடக்கம்


தூத்துக்குடி மாநகராட்சியில், பணம் செலுத்திய ஒரே நாளில் புதிய குடிநீர் இணைப்பு  இன்று சிறப்பு முகாம் தொடக்கம்
x
தினத்தந்தி 10 Nov 2017 2:00 AM IST (Updated: 10 Nov 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் பணம் செலுத்திய ஒரே நாளில் குடியிருப்புக்கு சிறப்பு முகாம் மூலம் புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியில் பணம் செலுத்திய ஒரே நாளில் குடியிருப்புக்கு சிறப்பு முகாம் மூலம் புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

குடிநீர் இணைப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு மேளா 25–9–2017 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் தற்போது வரை 10 ஆயிரத்து 965 குடிநீர் இணைப்பு விண்ணப்பங்கள் வரப்பெற்று, 8 ஆயிரத்து 976 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, மாநகராட்சி மக்கள் பயன்பாட்டுக்காக ஒரே நாளில் குடியிருப்புக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளான சங்கரப்பேரி, மீளவிட்டான், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம் மற்றும் தூத்துக்குடி புறநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. மக்கள் குடிநீர் இணைப்பு கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக மண்டலங்கள் வாரியாக சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இன்று சிறப்பு முகாம்

அதன்படி இன்று(வெள்ளிக்கிழமை)ராஜீவ்நகர் 9–வது தெருவை சேர்ந்தவர்களுக்கு பிள்ளையார் கோவில் அருகிலும், தபால் தந்தி காலனி 1 முதல் 5–வது தெரு வரை உள்ளவர்ளுக்கு 8–வது தெருவில் உள்ள சமுதாயநலக்கூடத்திலும், 49–வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கால்டுவெல் காலனி நீர்த்தேக்க நிலையத்திலும் நடக்கும் முகாமில் கட்டணம் செலுத்தலாம்.

நாளை(சனிக்கிழமை) ராஜகோபால்நகர், அன்னை தெரசாநகரை சேர்ந்தவர்கள் முத்தாரம்மன் கோவில் அருகிலும், தபால் தந்தி காலனி 6 முதல் 10–வது தெரு வரை உள்ளவர்கள் 8–வது தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்திலும், 48–வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கால்டுவெல் காலனி சபீதா சங்கர் மகாலில் நடைபெறும் முகாமிலும் கட்டணம் செலுத்தலாம்.

வருகிற 13–ந் தேதி பால்பாண்டிநகரை சேர்ந்தவர்களுக்கு அங்கு உள்ள ஆலயம் அருகிலும், தபால் தந்தி காலனி 11 முதல் 16–வது தெரு வரை உள்ளவர்கள் 8–வது தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்திலும், 51, 52, 53 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர் பழைய பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்திலும், 14–ந் தேதி நிகிலேசன் நகரை சேர்ந்தவர்கள் அங்கு உள்ள ரே‌ஷன் கடையிலும், கதிர்வேல்நகரை சேர்ந்தவர்கள் அங்குள்ள ஆலயம் அருகிலும், 51, 52, 53 வார்டுகளுக்கு உட்பட்டவர்கள் முத்தையாபுரம் மெயின் ரோடு பழைய பஞ்சாயத்து அலுவலகத்திலும், 15–ந் தேதி வி.எம்.எஸ்.நகரை சேர்ந்தவர்கள் சின்னகண்ணுபுரம் ஆலயம் அருகிலும், மடத்தூரை சேர்ந்தவர் மடத்தூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்திலும், 54–வது வார்டுக்கு உட்பட்டவர்கள் ஜே.எஸ்.நகர் மண்டல அலுவலகத்திலும், 16–ந் தேதி முத்தம்மாள்காலனியை சேர்ந்தவர்கள் பிள்ளையார் கோவில் அருகிலும், 54–வது வார்டுக்கு உட்பட்டவர்கள் ஜே.எஸ்.நகர் மண்டல அலுவலகத்திலும், 17–ந் தேதி அய்யாசாமி காலனியை சேர்ந்தவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகிலும், 55, 56–வது வார்டுக்கு உட்பட்டவர்கள் சாந்திநகர் லயன்ஸ்கிளப் கட்டிடத்திலும் நடைபெறும் முகாமில் கட்டணம் செலுத்தலாம்.

வாய்ப்பு

18–ந் தேதி மேக் கார்டன் பகுதியை சேர்ந்தவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பூங்கா அருகிலும், 55, 56–வது வார்டுக்கு உட்பட்டவர்கள் சாந்திநகர் லயன்ஸ்கிளப் கட்டிடத்திலும், 20–ந் தேதி செயிண்ட்மேரிஸ் காலனியை சேர்ந்தவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பூங்கா அருகிலும், 57–வது வார்டுக்கு உட்பட்டவர்கள் குமாரசாமிநகர் அங்கன்வாடி கட்டிடத்திலும், 58, 59–வது வார்டுக்கு உட்பட்டவர்கள் அபிராமிநகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் நடைபெறும் முகாமிலும் கட்டணம் செலுத்தலாம்.

ஒரே நாளில்...

அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் குடிநீர் இணைப்புக்கான தொகையை செலுத்திய ஒரே நாளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்கு விடுபட்டு போன பகுதிகள் கண்டறியப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story