புகையிலை பொருட்கள் மீதான தடை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


புகையிலை பொருட்கள் மீதான தடை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Nov 2017 3:45 AM IST (Updated: 10 Nov 2017 1:32 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் மீதான தடை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை,

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நூர்தீன். புகையிலை பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்க செயலாளரான இவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

விவசாயிகளிடம் இருந்து புகையிலையை வாங்கி பல்வேறு வகையான புகையிலை பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறோம். தமிழகத்தில் பான் மசாலா, குட்கா போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், புகையிலை பொருட்களுக்கு எந்த தடையும் இல்லை. குட்காவிற்கான தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பான் மசாலா மற்றும் குட்காவிற்கான தடையை நீட்டித்து கடந்த மே மாதம் 23-ந்தேதி உணவு பாதுகாப்பு கமிஷனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் புகையிலை பொருட்களையும் சேர்த்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்களுடன் ஏதேனும் உணவு பொருட்களை சேர்த்து தயாரித்தால் மட்டுமே உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும். ஆனால் புகையிலையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் மத்திய அரசின் சட்டத்தின்கீழ் தான் வரும். இதனால் தான் இதர மாநிலங்களில் புகையிலைப்பொருட்களுக்கு தடை இல்லை. இதுகுறித்து யாருடனும் ஆலோசிக்காமல் எதேச்சதிகாரமாக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இது குறித்து எங்கள் தரப்பினர் விளக்கம் அளிக்க எந்த வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. இந்த அறிவிப்பால் ஏராளமானவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கும் அறிவிப்பின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். கடந்த மே மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், “புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார். 

Related Tags :
Next Story