அலங்கோலமாக காட்சியளிக்கும் மார்க்கெட் வீதிகள் சீரமைக்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


அலங்கோலமாக காட்சியளிக்கும் மார்க்கெட் வீதிகள் சீரமைக்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2017 4:15 AM IST (Updated: 10 Nov 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

தொடர்மழையால் வேலூர் நேதாஜி மார்க்கெட் வீதிகள் அலங்கோலமாக சேறும் சகதியுடன் காட்சியளிக்கிறது. அதனை சீரமைத்து தரமான சாலை வசதிகளை செய்து தரக்கோரி சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்,

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே நேதாஜி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு அண்டை மாநிலங்களில் இருந்து லாரிகளில் காய்கறிகள், பூக்கள் வருகிறது. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு வியாபாரம் நடைபெறும் இடமாகவும், அதிக மக்கள் கூட்டம் காணப்படும் பகுதியாகவும் திகழ்கிறது.

கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் இந்த மார்க்கெட் வீதிகள் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. அதில் காய்கறி கழிவுகளும் கொட்டப்படுவதால் லாரிகள் அங்கு வரும்போது அவை நசுங்கி சேறும், சகதியுடன் கலந்து துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் இடமாக மாறிவிட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 150-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு நேதாஜி மார்க்கெட்டில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்கவும், சாலை வசதி வேண்டியும் கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் வேலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மனு

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் நாங்கள் சுமார் 1000 பேர் காய்கறி மூட்டைகள், பூ மூட்டைகள் போன்ற மூட்டைகளை லாரிகளில் இருந்து இறக்கவும், ஏற்றவும் பணியை செய்து வருகிறோம். மார்க்கெட் உள்பகுதியில் உள்ள சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும். மேலும் நாங்கள் சுமைகளை தூக்கி செல்லும் போது பள்ளங்களில் தவறி விழுவதால் கால் முறிந்து விடுகிறது. கால் முறிந்து விட்டால் எங்கள் குடும்ப வாழ்வாதாரமே பாதிக்கப்படும். எனவே ஏழை தொழிலாளர்களின் நலன்கருதி நேதாஜி மார்க்கெட் உள்பகுதியில் சாலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story