ஊத்துக்கோட்டை அருகே மழைநீர் தேங்கி நிற்பதால் கிருஷ்ணா நதி கால்வாய் பாலத்துக்கு ஆபத்து
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணா நதி கால்வாய் பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாலத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு 1983-ம் ஆண்டு ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். அப்படி திறந்து விடும் தண்ணீர் பூண்டி வரை வந்து சேருவதற்கு 183 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டது.
இதில் ஆந்திராவில் 158 கிலோ மீட்டர் தூரத்துக்கும், தமிழகத்தில் தாமரைகுப்பம் பகுதியில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோமீட்டர் தூரத்துக்கும் கால்வாய் உள்ளது. கால்வாய் நெடுகிலும் அந்தந்த பகுதி மக்கள் வந்து செல்ல ஏதுவாக பாலங்கள் அமைக்கப்பட்டன. ஊத்துக்கோட்டை நகர எல்லையில் சிற்றபாக்கம் பகுதியில் கால்வாயின் மீது 10 மீட்டர் நீளத்துக்கு பாலம் உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த பாலத்தை கடந்துதான் கீழ்சிற்றபாக்கம், மேல்சிற்றபாக்கம், பால்ரெட்டிகண்டிகை, ஆலங்காடு, அனந்தேரி உள்பட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஊத்துக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து சென்னை, திருவள்ளூர் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் மழை பெய்ததால் இந்த பாலத்தின் மீது தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை. தண்ணீர் தேங்கி நிற்பதால் பாலத்தின் கான்கிரீட்டில் உள்ள இரும்பு கம்பிகள் துரு பிடித்துள்ளன. இதை அப்படியே விட்டு விட்டால் பாலம் இடிந்து விடும் ஆபத்துஉள்ளது. ஆகையால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலத்தின் மீது தண்ணீர் தேங்காமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story