மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமான பணியை ‘இரவு நேரத்தில் நடத்தினால் சிறையில் தள்ளப்படுவீர்கள்’ ஐகோர்ட்டு எச்சரிக்கை


மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமான பணியை ‘இரவு நேரத்தில் நடத்தினால் சிறையில் தள்ளப்படுவீர்கள்’ ஐகோர்ட்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Nov 2017 3:10 AM IST (Updated: 10 Nov 2017 1:34 PM IST)
t-max-icont-min-icon

’3–ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமான பணியை இரவுநேரத்தில் மேற்கொண்டால், அதிகாரிகளை சிறையில் தள்ளவும் தயங்க மாட்டோம்’ என்று ஐகோர்ட்டு எச்சரித்தது.

மும்பை,

மும்பையில் 3–ம் கட்டமாக பாந்திரா– சீப்ஸ்– கொலபா இடையே 33 கி.மீ., தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்ட பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இரவுநேரத்தில் கட்டுமான பணி நடைபெற்றதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே, இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை கட்டுமான பணியை மேற்கொள்ள கூடாது என்று ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டது.

எனினும், அதிகாரிகள் இதற்கு செவிசாய்க்கவில்லை. இரவுநேரத்தில் தொடர்ந்து கட்டுமான பணி நீடித்ததால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் மீண்டும் ஐகோர்ட்டை நாடினர். இந்த வழக்கு தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் மற்றும் எம்.எஸ்.சோனக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தடை செய்யப்பட்ட நேரங்களில், கட்டுமான பணியை மேற்கொள்ள வேண்டாம் என்று அனைத்து அதிகாரிகளையும் அறிவுறுத்துவதாக மும்பை மெட்ரோ ரெயில் கார்பரே‌ஷன் லிமிடெட் நிறுவனம் தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம் வருமாறு:–

சட்ட விதிகளை பற்றிய விழிப்புணர்வு கொண்ட இந்த பொறுப்புமிக்க அதிகாரிகள், கோர்ட்டின் உத்தரவை மீறினால் ஏற்படும் விளைவுகளை பற்றியும் நன்கு அறிவர். ஆகையால், அவர்களுக்கு கருணை காட்ட முடியாது. அவர்களது பெயரை கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள். தேவைப்பட்டால், அவர்களை சிறையில் தள்ளி, ஒட்டுமொத்த மெட்ரோ ரெயில் கட்டுமான பணிக்கும் முற்றுப்புள்ளி வைக்க கூட நாங்கள் தயங்க மாட்டோம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story