நாசிக் அருகே மதிய உணவு சாப்பிட்ட 70 விவசாயிகளுக்கு வாந்தி- மயக்கம் ஒருவர் பலி


நாசிக் அருகே மதிய உணவு சாப்பிட்ட 70 விவசாயிகளுக்கு வாந்தி- மயக்கம் ஒருவர் பலி
x
தினத்தந்தி 10 Nov 2017 3:49 AM IST (Updated: 10 Nov 2017 12:35 PM IST)
t-max-icont-min-icon

நாசிக் அருகே பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்த மதிய உணவை சாப்பிட்ட 70 விவசாயிகளுக்கு திடீர் வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிர் இழந்தார்.

நாசிக்,

நாசிக் மாவட்டம் திண்டோரி தாலுகா உமரலே கிராமத்தில் தனியார் பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனம் சார்பில், தக்காளி விளைச்சல் பற்றி நேற்று முன்தினம் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், மதிய உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில், 70 விவசாயிகளுக்கு திடீரென வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. இதனால், அவர்கள் உடனடியாக நாசிக் சிவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனளிக்காமல் அதுல் பாண்டுரங் கேதர்(வயது 41) என்ற விவசாயி பரிதாபமாக உயிர் இழந்தார். மீதி 69 பேரது உடல்நிலையும் சிகிச்சைக்கு பின்னர் சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே, அவர்கள் சாப்பிட்ட மதிய உணவின் மாதிரி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் நச்சுத்தன்மை இருந்தது கண்டறியப்பட் டது. இதைத்தொடர்ந்து, அதனை வினியோகம் செய்த இரண்டு சமையல்காரர்கள் மீதும், சம்பந்தப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனத்தின் மண்டல மேலாளர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story