கடைகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்யவேண்டும் தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் வேண்டுகோள்


கடைகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்யவேண்டும் தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 Nov 2017 3:51 AM IST (Updated: 10 Nov 2017 3:51 AM IST)
t-max-icont-min-icon

கடைகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பதிவு கட்டாயம்

புதுச்சேரியில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் அதனை சார்ந்த அலுவலகங்கள், பண்டக அறைகள், கிடங்குகள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவை புதுச்சேரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். பணியாளர்கள் இல்லையென்றாலும் பதிவு செய்துகொள்ள வேண்டும். பணியாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரத்து 717 முதல் பணிகள் வாரியாக வெவ்வேறு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக மாறுபடும் அகவிலைப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.59 என 1-1-2017 முதல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழில்கள் வாரியாகவும், தனித்தனியே குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே பணியமர்த்துபவர்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்திற்கு குறையாமல் ஊதியம் வழங்கவேண்டும். அரசாணை பற்றிய முழு விவரங்கள் தொழிலாளர் துறை வலைதளத்தில் ( http://labour.pondicherry.gov.in) கொடுக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணிக்கு முன்...

மேலும் கடைகளை காலை 6 மணிக்கு முன்னரோ இரவு 10 மணிக்கு பின்னரோ திறந்து வைத்திருத்தல் கூடாது. வர்த்தக நிறுவனங்களை காலை 8 மணிக்கு முன்னரோ இரவு 8 மணிக்கு பின்னரோ திறந்து வைத்திருத்தல் கூடாது. திரையரங்குகள் மற்றும் இதர பொழுதுபோக்கு இடங்களை பகல் 1 மணிக்கு முன்னரோ (சனி மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 9 மணிக்கு முன்னரோ) இரவு 1-30 மணிக்கு பின்னரோ திறந்து வைத்திருத்தல் கூடாது.

பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்திற்கும், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கும் மிகாமல் பணி அளிக்கவேண்டும். வேலை நிமித்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்திற்கும் 54 மணி நேரத்திற்கும் மிகாமல் பணி அளிக்கலாம். ஆனால் மிகுதி நேரத்திற்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கவேண்டும். ஊதியத்தை பிரதிமாதம் 5-ந்தேதிக்குள் வங்கியில் செலுத்த வேண்டும். பணியாளர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும்.

தமிழ்மொழியில் பெயர்

மேலும் பணியாளர்களுக்கு நியமன கடிதமும், அடையாள அட்டையும், ஊதியசீட்டும் அளிக்கவேண்டும். தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஆணைப்படி பணியாளர்களுக்கான பதிவேடுகளில் பணியாளரின் பெயர், முகவரி, (புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர முகவரி) மற்றும் புகைப்படம் இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கடைகள், நிறுவனங்கள் பெயர் பலகை தமிழில் இருக்கவேண்டும். வேறு மொழி உபயோகிக்க வேண்டியிருந்தால் அம்மொழியின் வாசகம் தமிழ்மொழியின் வாசகத்தின் கீழே குறிப்பிடப்பட வேண்டும்.

மேலும் இணையதளம் வழியாக புதுச்சேரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் பணியமர்த்துபவரிடமிருந்து உரிய தகவல்கள் தேவைப்படுகிறது. இதற்கான படிவங்கள் தொழிலாளர் அதிகாரி (அமலாக்கம்) அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தொழிலாளர்துறை இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஆணையர் வல்லவன் தெரிவித்துள்ளார். 

Next Story