தாலுகா மருத்துவமனைகளுக்கு ரூ.23½ கோடியில் ரத்த பரிசோதனை கருவி


தாலுகா மருத்துவமனைகளுக்கு ரூ.23½ கோடியில் ரத்த பரிசோதனை கருவி
x
தினத்தந்தி 10 Nov 2017 11:30 AM IST (Updated: 10 Nov 2017 12:02 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் தாலுகா மருத்துவமனைகளில் ரூ.23½ கோடி மதிப்பில் ரத்த பரிசோதனை கருவிகள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தேனிக்கு வந்தார். முன்னதாக ஆண்டிப்பட்டி வந்தபோது, அங்குள்ள அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்குள்ள புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், சித்த மருத்துவப்பிரிவு, காய்ச்சல் சிகிச்சை வார்டுகளுக்கு சென்று அங்கிருந்த நோயாளிகளிடம் மருத்துவமனை செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் மருத்துவமனையில் இருந்த டெங்கு பாதிப்பு ரத்த பரிசோதனை கருவியை ஏன் செயல்படுத்துவதில்லை? என்று டாக்டர்களிடம் கேட்டார்.

அதற்கான பணியிடம் காலியாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உடனடியாக காலியாக உள்ள துப்புரவு மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்கும்படி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக 316 டாக்டர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ மேல்படிப்பு எம்.டி., எம்.எஸ். படித்த சிறப்பு டாக்டர்கள் 744 பேர் நியமனம் செய்வதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிடும். இதேபோல மாவட்ட தலைமை மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் துப்புரவு பணியாளர்கள் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை மூலமாக நியமனம் செய்யவும், தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் தேவையான நிதி இருப்பு உள்ளது. அதன்அடிப்படையில் விரைவில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்யவும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பை கண்டறியும் வகையில் ரூ.23½ கோடி மதிப்பில் 737 ரத்த பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.15 கோடியே 60 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தேனி மாவட்டத்தில் பாளையம், சின்னமனூர், கம்பம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் மின்தடை ஏற்படும்போது, ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுவதாக புகார் வந்தது. இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story