காமயகவுண்டன்பட்டியில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்


காமயகவுண்டன்பட்டியில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 10 Nov 2017 12:30 PM IST (Updated: 10 Nov 2017 12:23 PM IST)
t-max-icont-min-icon

காமயகவுண்டன்பட்டியில், சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

கம்பம்,

கம்பத்தை அடுத்த காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு, மறையூர் பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு கூலிவேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களை அழைத்து செல்வதற்காக தோட்ட நிர்வாகம் சார்பில் ஜீப்புகளும் இயக்கப்படுகின்றன. இந்த ஜீப்புகள் கம்பம், காமயகவுண்டன்பட்டி வழியாக அணைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று தொழிலாளர்களை ஏற்றிச்செல்கின்றன.

இதே போல் கம்பம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் காமயகவுண்டன்பட்டி-கம்பம் சாலை வழியாக இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்களில் சென்று வருகின்றனர். கம்பத்தில் இருந்து செல்லும் சாலையில், காமயகவுண்டன்பட்டி அருகே முல்லைப்பெரியாற்றை கடப்பதற்காக ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பாலத்தின் அருகே சாலையின் நடுவில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் ஏறி இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதில் பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். மேலும் உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் காமயகவுண்டன்பட்டி சாலையில் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story