தண்ணீரை 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுறுத்தல்


தண்ணீரை 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 10 Nov 2017 1:30 PM IST (Updated: 10 Nov 2017 2:02 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டிடத்தின் மேல் தளத்தில் நிறுத்தப்படும் தண்ணீரை 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். என்று மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுறுத்தினார்.

கரூர்,

கரூர் நகராட்சி பாலம்பாள்புரம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி, அமராவதி கரை பகுதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வெங்கமேடு, பழனியப்பா தெரு மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி அம்மன்நகர், பென்னிக்குயிக் நகர் ஆகிய இடங்களில் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் ஆய்வு செய்தார். தொடர்ந்து வீடு வீடாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுப்புற பகுதிகளை தண்ணீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக்கொள்ளவும், வாரம் ஒருமுறை தொட்டிகளை நன்கு தேய்த்து கழுவி சுத்தம் செய்தபின் தண்ணீரை சேமிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டிடத்தின் மேல் தளத்தில் நிறுத்தப்படும் தண்ணீரை 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். குப்பைகள் பாலீத்தின் பைகளை கழிவுநீர் கால்வாய்களில் போடாமல் குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பருகவும், நிலவேம்பு கசாயம் பருக வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து டெங்கு தடுப்பு பணிகள் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி அம்மன் நகர் பென்னிக்குயிக் நகர் பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டு கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சுத்தமாக உள்ளது. அதை அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, நகராட்சி ஆணையர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிட அலுவலர் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் அருள், வட்டார மருத்துவ அலுவலர், பூச்சியியல் அலுவலர், துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story