அஞ்சல் துறையின் சேமிப்பு கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது


அஞ்சல் துறையின் சேமிப்பு கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 10 Nov 2017 1:43 PM IST (Updated: 10 Nov 2017 2:16 PM IST)
t-max-icont-min-icon

அஞ்சல் துறையின் சேமிப்பு கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது என்று அசோக்குமார் எம்.பி. கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளபள்ளி கிராமத்தில், இந்திய அஞ்சல் துறை சார்பில், சேமிப்பு கணக்குடன் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் இணைப்பு பணி தொடக்க விழா நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் அசோக்குமார், கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் மானியங்களை தகுதி வாய்ந்த நபர்களுக்கு கிடைக்கவே ஆதார் எண், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒருவரே பல திட்டங்களில் மானியங்கள் பெறுவது தடுக்கப்படும். மேலும், உரிய நபருக்கு அரசின் மானியங்கள் செல்வதால் அரசின் நோக்கம் நிறைவேறும்.

ஆதார் எண், மொபைல் எண் இணைப்பை மேற்கொள்வதால், தங்களின் சேமிப்பு புத்தகம் தொலைந்து போனாலும் மொபைல் எண்ணை கூறி உடனடியாக பணம் எடுக்க முடியும். தங்களின் ஆதார் எண்ணை வைத்துக்கொண்டு உலகில் எங்கு வேண்டுமானாலும், அடையாளமாக பயன்படுத்தி கொள்ளமுடியும். பணம் வங்கியில் செலுத்தும்போது, அதுகுறித்த தகவல் தங்களின் மொபைல் எண்ணிற்கு வரும். எனவே நமது கணக்கு குறித்து தங்களின் இருப்பிடத்திற்கே தகவலை பெறலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 லட்சம் அஞ்சல் சேமிப்பு கணக்கு உள்ளது.

அனைவரும் தங்களின் கணக்குடன் ஆதார் எண், மொபைல் எண் இணைக்க வேண்டும். கிராம பகுதிகளில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியதன் பேரில் கிராமப்பகுதிகளில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து புதிய சேமிப்பு புத்தகங்களை வழங்கினார். இந்த விழாவில் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் வெங்கடாசலம், கோவிந்தன், மாதேஷ் மற்றும் அஞ்சல் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story