மயிலம் அருகே காதில் விஷத்தை ஊற்றி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி


மயிலம் அருகே காதில் விஷத்தை ஊற்றி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 10 Nov 2017 2:53 PM IST (Updated: 10 Nov 2017 2:53 PM IST)
t-max-icont-min-icon

விசாரணைக்கு பயந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காதில் விஷத்தை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

மயிலம்,

சென்னை பெருங்களத்தூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் கலிவரதன் (வயது 62). இவருடைய மனைவி சாவித்திரி (55), மகன்கள் பாரதிராஜா (33), பாக்கியராஜ் (29). இதில் பாரதிராஜாவும், பாக்கியராஜிம் கார் டிரைவர்கள் ஆவர். கலிவரதன் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை 8.30 மணிக்கு காரில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்தார். பின்னர் அவர் அந்த விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினர். தொடர்ந்து அவர்கள் தாங்கள் வாங்கி வந்த சாப்பாடு மற்றும் இனிப்புகளை பகிர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தாங்கள் கொண்டு வந்த விஷத்தை எடுத்து ஒருவர் பின் ஒருவராக தங்களது காதில் ஊற்றிக்கொண்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் வாந்தி ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு மரணபயம் உண்டானது.

இதையடுத்து அவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என்று கருதி உடனே அவர்களாகவே 108 ஆம்புலன்சுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நாங்கள் விஷத்தை காதில் ஊற்றி கொண்டோம், எங்களை காப்பாற்றுங்கள் என்று கூறி அவர்கள் தங்கியிருந்த விடுதியின் முகவரியை தெரிவித்துள்ளனர்.
அதைதொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விடுதி அறையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கலிவரதன் உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தங்கும் விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கலிவரதன் மகன் பாரதிராஜாவுக்கும், அவருடைய மனைவி சுகன்யாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களாக அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சுகன்யா தன்னிடம் பாரதிராஜாவின் தம்பியான பாக்கியராஜ் பாலியல் தொந்தரவு செய்ததாக தாம்பரம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீசார், பாக்கியராஜை அழைத்ததாக தெரிகிறது. இதற்கிடையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக கலிவரதன் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் போலீசார் விசாரணை குறித்த தகவலால் கலிவரதன், சாவித்திரி, பாரதிராஜா, பாக்கியராஜ் ஆகிய 4 பேம் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது.

இதையடுத்து அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் கூட்டேரிப்பட்டில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்ததும் அங்கு காதில் விஷத்தை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கூட்டேரிப்பட்டில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story