நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டு போராட்டம்


நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2017 3:00 AM IST (Updated: 11 Nov 2017 12:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை 8 மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

போலீஸ் நிலையத்தில் வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை 8 மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வக்கீல் மீது தாக்குதல்

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள மாறன்குளத்தை சேர்ந்தவர் செம்மணி. வக்கீல். இவரை கடந்த 3–ந் தேதி போலீசார் கைது செய்து ராதாபுரம் மற்றும் உவரி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது அவரை தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து வக்கீல் செம்மணியை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் உள்பட 5 பேர் பாளையங்கோட்டை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். செம்மணியை தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

போலீஸ் குவிப்பு

இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுகுணாசிங் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள், அந்த பகுதியில் தடுப்பு வேலி அமைத்து அலுவலகத்துக்குள் யாரும் நுழைந்து விடாதபடி பாதுகாப்பாக நின்று கொண்டு இருந்தனர்.

பகல் 11.30 மணி அளவில் நெல்லை கோர்ட்டு வளாகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் திரண்டனர். அவர்கள் அங்கு இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டவாறு வந்தனர்.

முற்றுகை போராட்டம்

அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே வந்த போது, அவர்கள் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு வக்கீல்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சில வக்கீல்கள் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வக்கீல்கள், “வக்கீல் செம்மணியை தாக்கிய போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம், மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் சூப்பிரண்டு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்“ என கோ‌ஷங்களை எழுப்பினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம் நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுகுணாசிங் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர் கூறும் போது, “இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் இது தொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார். இதையடுத்து வக்கீல்கள் சமாதானம் அடைந்தனர். அவர்கள் முற்றுகை போராட்டத்தை விலக்கி கொள்வதாக அறிவித்தனர்.

எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

அப்போது வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் கூறும் போது, “வக்கீல் செம்மணியை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் விசாரணையை விரைந்து முடிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியில்யொன்றால், பாளையங்கோட்டையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்–அமைச்சர் பங்கேற்கும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் எங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்துவோம்“ என்றார்.

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 8 மாவட்ட வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story