பிள்ளைகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்பதற்காக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தாய் கைது
மதுரையில் தனது பிள்ளைகளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என்பதற்காக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தாயை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
மதுரை சிம்மக்கல் வைகை தென்கரை பகுதியில் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அலுவலகத்திற்கு நேற்று காலை 7.35 மணிக்கு போன் ஒன்று வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனே பள்ளி நிர்வாகம் இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்தும் திலகர்திடல் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாயுடன் விரைந்து வந்தனர். இதற்கிடையில் பள்ளிக்கு மாணவிகள் வர தொடங்கினார்கள். அவர்களை போலீசார் உள்ளே விட மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பள்ளி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த தகவல் காட்டுத்தீ போல அந்த பகுதி முழுவதும் பரவியது. அந்த பகுதி மக்களும், மாணவிகளும் பள்ளி முன்பு திரண்டு இருந்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில் அது வெறும் வதந்தி என்பது தெரியவந்தது.
சோதனை முடிய வெகு நேரம் ஆகியதால் பள்ளி நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. இந்த சம்பவம் குறித்து திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கும் காலை 7.55 மணிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர் வெடிகுண்டு வைத்ததாக கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
அங்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்றனர். பள்ளிக்கு மாணவ–மாணவிகள் செல்ல தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பாதுகாப்பாக அங்கிருந்து மாணவ–மாணவிகளை வெளியேற்றி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரவியதால் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. போலீசார் பள்ளிக்கு வந்த செல்போன் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்ட போது, அது பாண்டிய வேளாளர் தெருவில் வசிக்கும் சரவணன் மனைவி பாண்டிசெல்வி(வயது 34) என்பவரின் போன் நம்பர் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரித்த போது, தான் மன அழுத்தத்தில் இருந்ததாவும், தனது மகள் சாரதா பள்ளியிலும், மகன் எம்.கே.புரம் பள்ளியில் படித்து வருவதாகவும் கூறினார்.
மேலும் தனது பிள்ளைகள் இன்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்பதற்காக வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி போன் செய்தேன் என்று அப்பாவித்தனமாக தெரிவித்தார். அதை தொடர்ந்து செல்வியை போலீசார் கைது செய்தனர்.