எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக நெல்லை கோர்ட்டு அருகில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவை அகற்றக்கோரி வழக்கு
பாளையங்கோட்டையில் நாளை நடக்க உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோர்ட்டு அருகில் உள்ள வரவேற்பு வளைவை அகற்றக்கோரிய வழக்கை கலெக்டர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த சையதுஅஜீஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
நெல்லை பாளையங்கேட்டை பெல் மைதானத்தில் வருகிற 12–ந்தேதி (அதாவது நாளை) எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் தற்காலிக வரவேற்பு வளைவு மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் பாதிப்பு உண்டாகிறது.
ஏற்கனவே, கோர்ட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு எந்தவித விளம்பர பலகைகளோ, பதாகைகளோ, வரவேற்பு வளைவுகளோ அமைக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பருவமழை பெய்து வரும் தற்போதைய சூழலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக ஐகோர்ட்டு உத்தரவை மீறி வைக்கப்பட்டுள்ள தற்காலிக வரவேற்பு வளைவை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோர்ட்டு அருகில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், நெல்லையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 12–ந்தேதி (நாளை) நடக்க உள்ளதால், மனுதாரரின் கோரிக்கையை 11–ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.