ஈரோடு ஆஸ்பத்திரியில் டாக்டர் குரலில் பேசி ரூ.8¾ லட்சம் அபேஸ்; அண்ணன் –தம்பி கைது


ஈரோடு ஆஸ்பத்திரியில் டாக்டர் குரலில் பேசி ரூ.8¾ லட்சம் அபேஸ்; அண்ணன் –தம்பி கைது
x
தினத்தந்தி 11 Nov 2017 3:30 AM IST (Updated: 11 Nov 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு சுதா ஆஸ்பத்திரியில் டாக்டர் குரலில் பேசி ரூ.8¾ லட்சத்தை அபேஸ் செய்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு பெருந்துறை ரோட்டில் சுதா பல துறை ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனராக டாக்டர் சுதாகரும். காசாளராக கொடுமுடி மூர்த்திபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 26) என்பவரும் உள்ளனர். கடந்த 6–ந் தேதி இரவு சுமார் 8 மணி அளவில் ஆஸ்பத்திரி காசாளருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் எதிர்முனையில் பேசியவர் டாக்டர் சுதாகர் பேசியதுபோன்று பேசி, தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், ஆஸ்பத்திரியில் இருந்து வசூல் பணத்தை தான் அனுப்பி வைக்கும் ஒரு நபரிடம் கொடுத்து விடும்படியும் கூறினார். தொலைபேசியில் பேசிய குரல் டாக்டர் சுதாகரின் குரல் போன்று இருந்ததால் அதை உண்மை என்று காசாளர் நம்பினார்.

அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு டிப்–டாப்பாக மர்ம ஆசாமி ஒருவர் வந்தார். அவர் நேராக காசாளர் அறைக்கு சென்று, டாக்டர் அனுப்பியதாக கூறினார். ஏற்கனவே பணம் கொடுக்க டாக்டர் கூறியதால், அவரிடம் வேறு விவரங்கள் எதுவும் கேட்காமல் ரூ.8 லட்சத்து 87 ஆயிரத்தை காசாளர் எடுத்துக்கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அந்த மர்ம நபர் வேகமாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி காரில் சென்று தப்பினார்.

அவர் சென்ற சில மணி நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு டாக்டர் சுதாகர் வந்து அன்றைய கணக்குகளை சரிபார்த்தார். அப்போது, கணக்கில் ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் குறைந்திருந்ததை கண்டுபிடித்தார். அதுபற்றி காசாளரிடம் அவர் கேட்டபோது, ‘நீங்கள் அனுப்பி வைத்த நபரிடம் பணத்தை கொடுத்து விட்டேன்’ என்று கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தான் யாரிடமும் பணத்தை கொடுத்து விடுமாறு கூறவில்லை என்று தெரிவித்தார்.

அப்போதுதான், மர்ம நபர் டாக்டர் சுதாகர் போன்று குரலை மாற்றி மோசடியாக பேசி ரூ.8¾ லட்சத்தை அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது. இதுபற்றி காசாளர் கார்த்திக் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும், தொலைபேசியில் பதிவான செல்போன் எண்ணையும் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் டாக்டர் சுதாகர் போல் பேசி பணத்தை அபேஸ் செய்து சென்றது, ஈரோடு கச்சேரி வீதியை சேர்ந்த அருண்சங்கர் (32) மற்றும் அவரது தம்பி சதீஷ் சம்பத் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அருண்சங்கர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சுதா ஆஸ்பத்திரியில் காசாளராக பணியாற்றி வேலையில் இருந்து நின்றுவிட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அருண்சங்கர், சதீஷ் சம்பத் ஆகியோரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.8¾ லட்சம், 2 செல்போன்கள் மற்றும் கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


Next Story