பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு: கர்நாடக அரசு ஊழியர்கள் பெங்களூருவில் பிரமாண்ட பேரணி
பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டு வழங்க எதிர்ப்பு தெரிவித்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கோரியும் கர்நாடக அரசு ஊழியர்கள் பெங்களூருவில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர். இட ஒதுக்கீட்டை தக்க வைக்க... கர்நாடக அரசில் பணியாற்றி வரும் ஆதிதிராவிடர்கள்
பெங்களூரு,
பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டு வழங்க எதிர்ப்பு தெரிவித்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கோரியும் கர்நாடக அரசு ஊழியர்கள் பெங்களூருவில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர்.
இட ஒதுக்கீட்டை தக்க வைக்க...கர்நாடக அரசில் பணியாற்றி வரும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின ஊழியர்கள் பயன் பெறும் வகையில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கி கர்நாடக அரசு சட்டம் இயற்றியது. இதனால் அந்த வகுப்புகளை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் குறைந்த சேவை காலத்தில் பதவி உயர்வு பெற்றனர். இதற்கு எதிரான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.
அந்த வழக்கில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் கர்நாடக அரசின் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. இதையடுத்து பதவி உயர்வு பெற்றவர்கள் மீண்டும் பழைய பணிக்கு திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை தக்கவைக்க பெலகாவியில் நடைபெற உள்ள சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் கர்நாடக அரசு புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது.
பிரமாண்ட பேரணிஇதற்கு கர்நாடக அரசில் பணியாற்றி வரும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் பொதுப்பிரிவு ஊழியர்களை உள்ளடக்கிய அஹிம்சா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்த அமைப்பு சார்பில் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தியும் பிரமாண்ட பேரணி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
பெங்களூரு சுதந்திர பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணி அரண்மனை சாலை வழியாக அரண்மனை மைதானம் வரை நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். பதவி உயர்வு வழங்குவதில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றும், இதற்காக புதிய சட்டத்தை இயற்றக்கூடாது என்றும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
புதிய சட்டத்தை இயற்ற...இந்த பேரணி அரண்மனை மைதானத்தை அடைந்ததும் அங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் அஹிம்சா அமைப்பின் பொதுச் செயலாளர் நாகராஜ் பேசியதாவது:–
கர்நாடக அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்த ஆர்வம் காட்டவில்லை. பதிலுக்கு புதிய சட்டத்தை இயற்ற மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது ஆகும்.
அநீதி இழைத்து வருகிறதுசிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் பொதுப்பிரிவு அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் கர்நாடக அரசு அநீதி இழைத்து வருகிறது. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வெறும் 4 ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைக்கிறது. இதர பிரிவினருக்கு 25 ஆண்டுகள் பணியாற்றினாலும் பதவி உயர்வு கிடைப்பது இல்லை.
பதவி உயர்வுக்கான பணியிடங்களில் இட ஒதுக்கீட்டினருக்கு 18 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதனால் 82 பிரிவினருக்கு பதவி உயர்வு கிடைப்பது இல்லை. நாங்கள் தொடர்ச்சியாக 25 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தினோம். இறுதியாக அஹிம்சா பிரிவினரின் நலனுக்கு ஆதரவாக நியாயம் கிடைத்துள்ளது.
தகுதி இல்லாதவர்களா?இந்த அரசு 18 பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே செயல்படும் அரசா?. மாநிலத்தில் மீதியுள்ள ஒடுக்கப்பட்ட பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி இல்லாதவர்களா?. எனவே, சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை இந்த அரசு அமல்படுத்த வேண்டும். புதிய சட்டம் இயற்றும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் 8 லட்சம் அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணிப்போம்.
இவ்வாறு நாகராஜ் பேசினார்.
இந்த பேரணி சென்ற சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் அரண்மனை சாலையை சுற்றியுள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.