பாட்டி அடித்துக்கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை


பாட்டி அடித்துக்கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 11 Nov 2017 4:15 AM IST (Updated: 11 Nov 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

பாட்டியை அடித்துக்கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்தமாம்பட்டு அங்காளம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி தனம் (வயது 60). இவர்களுக்கு பானுமதி, யசோதை, விஜயா என்கிற 3 மகள்களும், பட்டுசாமி என்கிற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் பட்டுசாமி மகன் குணசேகரன் (30) என்பவருக்கும், அவரது அத்தை விஜயாவின் கணவர் கணபதிக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் கணபதிக்கு சொந்தமான மினி லாரியை குணசேகரன் சேதப்படுத்தினார்.

இது பற்றி கணபதி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரை வாபஸ் பெறுமாறு கணபதியிடம் குணசேகரன் கூறியும் அவர் கேட்கவில்லை.

இதற்கு தன்னுடைய பாட்டி தனம் தான் காரணம் என்று குணசேகரன் அவர் மீது கோபமாக இருந்தார். கடந்த 22–11–2016 அன்று தெரு வழியாக தனம் நடந்து சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த குணசேகரன் அவரை ஆபாசமாக பேசி கட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி காடாம்புலியூர் போலீசில் பானுமதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கு தொடர்பாக அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குணசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பவானி ஆஜராகி வாதாடினார்.


Next Story