வேலூர் கணியம்பாடி அருகே கோவிலில் திருடப்பட்ட ஐம்பொன் விநாயகர் சிலை மீட்பு; 2 பேர் கைது


வேலூர் கணியம்பாடி அருகே கோவிலில் திருடப்பட்ட ஐம்பொன் விநாயகர் சிலை மீட்பு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Nov 2017 4:45 AM IST (Updated: 11 Nov 2017 2:07 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கணியம்பாடி அருகே 12 நாட்களுக்கு முன்பு கோவிலில் திருடப்பட்ட ஐம்பொன் விநாயகர் சிலை மீட்பு; 2 பேர் கைது ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் அதிரடி நடவடிக்கை

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கல்லப்பாடி பகுதியில் சிலை கடத்தல்காரர்கள் பதுங்கியிருப்பதாக ஐ.ஜி.பொன்மாணிக்க வேலுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 இதையடுத்து வேலூருக்கு விரைந்து வந்த அவர் வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசாருடன் குடியாத்தம் அருகே கல்லப்பாடி பகுதிக்கு சென்றார். அங்கு 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள சோழவரத்தில் செல்வவிநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடம் 2 கடத்தல் சிலைகள் உள்ளதாகவும் கல்லப்பாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் புதைத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் அந்த விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று விநாயகர், அம்மன், முருகர் என 3 ஐம் பொன்சிலைகளை மீட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அதில் விநாயகர் சிலை கணியம்பாடி அருகே உள்ள சோழவரம் கிராமம் வடக்கு கொட்டாய்மேடு பகுதியில் உள்ள பழமை வாய்ந்த செல்வவிநாயகர் கோவிலில் கடந்த 29–ந் தேதி இரவு பூட்டை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டனர்.

பின்னர் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:–

குடியாத்தம் அருகே உள்ள கல்லப்பாடி பகுதியில் விவசாய கூலிகளான திருலோக சுந்தர் (வயது 39), அன்பு (24) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தோம். அவர்களிடம் இருந்து 3 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. அதில் விநாயகர் சிலை சோழவரத்தில் திருடப்பட்டது என்பது உறுதிஆகி உள்ளது. மீதம் உள்ள சுமார் 1 அடி கொண்ட முருகர் சிலையும் ¾ அடி கொண்ட அம்மன் சிலையும், எங்கு திருடப்பட்டது என்பது தெரியவில்லை.

 இது குறித்து விசாரணை செய்து வருகிறோம். பிடிபட்ட 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சிலை திருட்டு வழக்கில் 3–வது முக்கிய குற்றவாளி ஒருவர் உள்ளார். அவர் பழம்பெரும் சிலை கடத்தல் குற்றவாளி. அவர் மீது தமிழகம் முழுவதும் 14 வழக்குகள் உள்ளன. இந்த சம்பவத்தில் அந்த முக்கிய குற்றவாளி உள்பட மேலும் 2 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளோம். விரைவில் கைது செய்யப்படுவார்கள். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் 3 ஐம்பொன் சிலைகளையும் ரூ.4 கோடிக்கு விற்பனை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். ஐம்பொன் சிலை திருடிய சம்பவத்தில் 12 நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story