காட்பாடி அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை


காட்பாடி அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 11 Nov 2017 4:45 AM IST (Updated: 11 Nov 2017 2:07 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் மற்றும் அவருடைய மனைவி இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காட்பாடி,

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரி அருகே உள்ள விக்ரமாசிமேடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 70). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி பொன்னியம்மாள் (65). இவர்களுக்கு கோபி, குமார் என்ற 2 மகன்களும், செல்வி சாந்தி, சரளா ஆகிய 3 மகள்களும் உள்ளனர். அவர்களில் கோபியும், குமாரும் டெல்லியில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

மகள்கள் 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. அவர்களில் செல்வி கே.வி.குப்பத்திலும், சாந்தி குடியாத்தத்தை அடுத்த ரேணுகாபுரத்திலும் வசித்து வருகின்றனர். 3–வது மகள் சரளா காட்பாடியில் ரெயில்வே போலீசாக வேலைபார்த்து வருகிறார். இதனால் முருகேசனும், அவருடைய மனைவி பொன்னியம்மாளும் தங்கள் நிலத்தில் வீடுகட்டி தனியாக வசித்து வந்துள்ளனர்.

மகன்கள் ராணுவத்தில் வேலை பார்ப்பதால் குடியாத்தத்தில் உள்ள ராணுவ கேண்டீனில் இவர்கள் பொருட்கள் வாங்கி வந்துள்ளனர். வழக்கம்போல நேற்று முன்தினம் ராணுவ கேண்டீனில் குடியாத்தத்தில் உள்ள மகள் சாந்தி பொருட்களை வாங்கினார். பின்னர் நேற்று காலை அந்த பொருட்களை ஒரு ஆட்டோவில் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

விக்ரமாசிமேட்டில் உள்ள முருகேசனின் வீட்டிற்கு ஆட்டோ சென்றது. அங்கு வீட்டுக்கதவு திறந்திருந்தது. ஆட்டோ டிரைவர் வெளியில் நின்று கூப்பிட்டுள்ளார். நீண்டநேரமாகியும் யாரும் வெளியே வராததால் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு முருகேசனும், அவருடைய மனைவி பொன்னியம்மாளும் கொலைசெய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், முருகேசனின் மகள் சாந்திக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் தகவல் அறிந்த காட்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் அலெக்ஸ், பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர்கள் பழனி, தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அங்கு முருகேசன், பொன்னியம்மாள் இருவரும் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தனர். பொன்னியம்மாள் அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று பணமும் கொள்ளை போயிருந்தது. இதனால் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

போலீசார் வீட்டை சுற்றி பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் வீட்டின் மொட்டைமாடிக்கு சென்று அங்கிருந்து படிக்கட்டு வழியாக வீட்டுக்குள் இறங்கி கொலை செய்து, நகை பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு, பின்னர் கதவை திறந்துகொண்டு சென்றது தெரியவந்தது. சுமார் 20 பவுன் நகை கொள்ளையடிக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று வீட்டில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பணம் எவ்வளவு வைத்திருந்தார் என்பது சரியாக தெரியவில்லை.

கொலையாளிகள் குறித்து துப்பு துலக்க வேலூரில் இருந்து மோப்பநாய் சன்னி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து வீட்டைசுற்றிவந்து மெயின்ரோடு வரை ஓடியது. யாரையும் கவ்விபிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவன்–மனைவியை கொலைசெய்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் முருகேசன், அவருடைய மனைவி பொன்னியம்மாள் ஆகிய இருவரையும் கொலைசெய்து, நகை– பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் தாங்கள் பிடிபடாமல் இருக்க தங்கள் கைகளில் விளக்கெண்ணெய் தடவி உள்ளனர். மேலும் அங்கு தங்கள் கைரேகை பதியாமல் இருக்கவும் நூதன முறையை கையாண்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story