விமானத்தில் கழிவறை சுத்தமாக இல்லை எனக்கூறியதால் மன்னிப்பு கேட்கும்படி இளம்பெண்ணுக்கு தொல்லை
விமானத்தில் கழிவறை சுத்தமாக இல்லை எனக்கூறிய இளம்பெண்ணை மன்னிப்பு கேட்கும்படி 3 ஊழியர்கள் தொல்லை கொடுத்ததுடன், இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
பெங்களூரு,
விமானத்தில் கழிவறை சுத்தமாக இல்லை எனக்கூறிய இளம்பெண்ணை மன்னிப்பு கேட்கும்படி 3 ஊழியர்கள் தொல்லை கொடுத்ததுடன், இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதுதொடர்பாக 3 ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இளம்பெண்ணை படம் பிடித்தனர்பெங்களூரு சதாசிவநகர் அருகே ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவர், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து தனியாருக்கு சொந்தமான விமானத்தில் பெங்களூருவுக்கு புறப்பட்டார். விமானத்தில் தனது இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண், கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறை அசுத்தமாக இருந்ததாக தெரிகிறது. உடனே அவர், விமானத்தில் இருந்த ஊழியர்களிடம் கழிவறை சுத்தமாக இல்லை, அதனை சுத்தம் செய்யும்படி கூறியுள்ளார். இதனை ஏற்க ஊழியர்கள் மறுத்து விட்டனர்.
மேலும் கழிவறை சுத்தமாக இல்லை என எப்படி கூறலாம் என்று இளம்பெண்ணிடம் ஊழியர்கள் தகராறு செய்துள்ளனர். பின்னர் அந்த விமானம் ஐதராபாத்திற்கு வந்த போதும், இளம்பெண்ணிடம் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இளம்பெண்ணை ஒரு ஊழியர் தனது செல்போனில் படம் பிடித்ததாக தெரிகிறது.
3 பேர் மீது வழக்குப்பதிவுஅதன்பிறகு, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், தனியார் விமானம் தரை இறங்கியதும் மற்ற பயணிகளை போல இளம்பெண்ணும் கீழே இறங்கி சென்றுள்ளார். அப்போது அவரை மட்டும் வழிமறித்த 3 ஊழியர்கள், விமானத்தில் கழிவறை சுத்தமாக இல்லை என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்கும்படி சொல்லி தொல்லை கொடுத்துள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். பின்னர் இளம்பெண்ணை தகாத வார்த்தையில் ஊழியர்கள் திட்டி அங்கிருந்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் தனியார் விமான நிலைய ஊழியர்களான சன்மித் கரந்திகர், கைஜாத் சுனாக், ஜாதின் ரவீந்திரா ஆகிய 3 பேரும் விமானத்தில் கழிவறை சுத்தமாக இல்லை எனக்கூறியதால் தன்னிடம் தகராறு செய்ததுடன், மன்னிப்பு கேட்கும்படி சொல்லி தொல்லை கொடுத்ததாகவும், தன்னை செல்போனில் படம் பிடித்ததாகவும் இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.