அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு


அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 11 Nov 2017 4:30 AM IST (Updated: 11 Nov 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

கும்பகோணம்,

தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் கோபிநாதன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராம.ராமநாதன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் எம்.ரெத்தினசாமி, திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் சூரியநாராயணன், திருவையாறு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் மோகன், எஸ்.ஏ. ஆறுமுகம், முத்தரசன், மாவட்ட மகளிரணிசெயலாளர் தமிழ்செல்வி வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அ.தி.மு.க. தமிழகத்தில் செழித்தோங்கி இருக்கிறது. எம்.ஜி.ஆர். 1–ம் வகுப்பில் இருந்து 3–ம் வகுப்பு வரை கும்பகோணத்தில் படித்தார். வறுமை, கஷ்டம், பசி கொடுமையை அவர் உணர்ந்தவர். அதனால்தான் சத்துணவு திட்டத்தை அறிவித்தார். எம்.ஜி.ஆர். கொண்டு வந்த இந்த திட்டத்தின் மூலம் எண்ணற்ற பேர் படித்து உயர் பதவிக்கு வந்துள்ளனர்.

தமிழுக்கு பல்கலைக்கழகம் தந்தவர் எம்.ஜி.ஆர். தஞ்சை மண்ணில் வளர்ந்ததற்கு நன்றி கடனாக அந்த பல்கலைக்கழகத்தை தொடங்கினார். அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க பாடுபட்டவர் ஜெயலலிதா. இதற்கு முன்னும் நமது கழகம் பிளவுபட்டது. அதையெல்லாம் முறியடித்து இரும்பு கோட்டையாக அ.தி.மு.க.வை மாற்றியவர் ஜெயலலிதா. உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சையில் வருகிற 29–ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான பேர் கலந்து கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான நிவாரண பணிகளை மேற்கொண்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமி‌ஷன் அமைத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது. கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். படித்த யானையடி பள்ளிக்கு எம்.ஜி.ஆர்.பெயரை சூட்டவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி.க்கள் ஆர்.கே.பாரதிமோகன், கு.பரசுராமன், சி.வி.சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.செல்வராஜ், நெத்தியடி நாகையன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் சோழபுரம் கா.அறிவழகன் நன்றி கூறினார்.


Next Story