தஞ்சையில் தினகரன் ஆதரவாளர் வீட்டில் 30 மணி நேரம் அதிகாரிகள் சோதனை


தஞ்சையில் தினகரன் ஆதரவாளர் வீட்டில் 30 மணி நேரம் அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 11 Nov 2017 4:15 AM IST (Updated: 11 Nov 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் தினகரன் ஆதரவாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் 30 மணி நேரம் சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பிலோமினா நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் (அம்மாஅணி) ராஜேஸ்வரன் மற்றும் சசிகலாவின் அண்ணன் மகன் மறைந்த டி.வி.மகாதேவன் ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக சோதனை நடத்தினர்.

டி.வி.மகாதேவன் வீட்டில் சோதனை நேற்று மாலை நிறைவடைந்தது. ராஜேஸ்வரன் வீட்டில் நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு சோதனை தொடங்கி இரவு 11.30 மணி வரை நடந்தது. நேற்று 2-வது நாள் காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது. முதல்நாள் 17 மணி நேரமும், நேற்று 13 மணி நேரமும் என மொத்தம் 30 மணி நேரம் சோதனை நடந்தது.

சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் வெளியே வந்தனர். அப்போது அவர்களிடம் நிருபர்கள், சோதனையின் போது ஆவணங்கள், பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா? என கேட்ட போது, “இது குறித்து சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் கேளுங்கள்” என கூறி விட்டு சென்று விட்டனர்.

பின்னர் ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் ராஜேஸ்வரன் கூறுகையில், “எனது வீட்டில் 2 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று 2-வது நாள் எனது வங்கி கணக்குகள் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் அது தொடர்பாக என்னிடம் கேள்விகள் கேட்டனர். நான் அதற்கு உரிய பதில்களை அளித்துள்ளேன். தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறினார்கள். அதற்கு நான் சரி என்று கூறினேன். சோதனையின் போது ஆவணங்கள் எதுவும் எடுத்துச்செல்லவில்லை. தினகரன் ஆதரவாளர்களாகிய எங்கள் வீட்டில் எதற்காக சோதனை நடத்தப்படுகிறது என்பது தமிழக மக்களுக்கு தெரியும்”என்றார்.

Next Story