கலெக்டர் அலுவலகத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் முற்றுகை போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2017 4:00 AM IST (Updated: 11 Nov 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி தொகுதியில் தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீரோடை பிரச்சினையை சரிசெய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. முற்றுகைப் போராட்டம் நடத்தினார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் ஒன்றிய பகுதிகளில் எரியாமல் உள்ள தெருவிளக்குகள் சரி செய்ய வேண்டும், 34 பஞ்சாயத்துகளில் கழிவு நீரோடைகளில் தேங்கியுள்ள சாக்கடையை அகற்ற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நவம்பர் 10–ந் தேதி (நேற்று) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று ஆஸ்டின் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று காலை ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் தாமரைபாரதி, வக்கீல் மதியழகன், நெடுஞ்செழியன், சாய்ராம், குமரி ஸ்டீபன், பார்த்தசாரதி உள்பட ஏராளமானோர் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் உள்புற நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்த ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக அதிகாரிகள், ஆஸ்டின் எம்.எல்.ஏ.வை அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆஸ்டின் எம்.எல்.ஏ.விடம் வருகிற 18–ந் தேதிக்குள் பஞ்சாயத்துகளில் உள்ள கழிவுநீரோடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், வருகிற 15–ந் தேதி முதல் 30–ந் தேதிக்குள் 3 ஒன்றிய பகுதிகளிலும் எரியாத தெரு விளக்குகளை சரி செய்து தர நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆஸ்டின் எம்.எல்.ஏ.வும். அவருடன் வந்தவர்களும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 1½ மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டம் அதன்பிறகே முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து ஆஸ்டின் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் ஆகிய 3 ஒன்றிய பகுதிகளில் 7500–க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதேபோல் ஆட்கள் பற்றாக்குறையால் 34 பஞ்சாயத்துகளில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெறாமல் இருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளில் கொசுத்தொல்லையும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எனது தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்குள் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக அதிகாரிகள் என்னை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிற 18–ந் தேதிக்குள் சாக்கடை கால்வாய்களை சீரமைப்பதாகவும், வருகிற 15–ந் தேதி முதல் 30–ந் தேதிக்குள் எரியாத தெருவிளக்குகள் அனைத்தையும் சரிசெய்வதாகவும் உறுதி அளித்துள்ளனர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டுள்ளோம்.

இவ்வாறு ஆஸ்டின் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story