அன்னவாசல் அருகே ஆற்றில் மணல் அள்ள வந்த 50 லாரிகள் சிறைபிடிப்பு பொதுமக்கள் போராட்டம்
அன்னவாசல் அருகே ஆற்றில் மணல் அள்ள வந்த 50 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.
நார்த்தாமலை,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பரம்பூரில் சேந்தாங்கறை ஆறு உள்ளது. இந்த ஆற்றில் கடந்த சில நாட்களாக இரவு, பகலாக 100–க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் நீராதாரம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது.
ஆற்றில் போடப்பட்டுள்ள குடிநீர் ஆதாரமாக விளங்கும் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது. மேலும் லாரிகள் போக்குவரத்தால் பரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பரம்பூர், கல்லம்பட்டி, காரசூராம்பட்டி, காப்புக்குடி, வண்ணாரப்பட்டி, புதுப்பட்டி, குறிஞ்சிக்குடிப்பட்டி, பித்தகுடி, கவுனாரிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று பரம்பூர் வழியாக சேந்தாங்கறை ஆற்றுக்கு மணல் அள்ள வரிசையாக சென்ற 50–க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து இலுப்பூர் தாசில்தார் சோனை கருப்பையா, அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விராலிமலை செந்தில்மாறன், இலுப்பூர் மங்கையர்க்கரசி, அன்னவாசல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மணல் அள்ளுவதற்கு தடைவிதித்தால் தான் லாரிகளை விடுவிப்போம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பரம்பூரில் சேந்தாங்கறை ஆற்றுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பழுதடைந்த சாலைகள், குடிநீர் குழாய்களை சரிசெய்வதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இலுப்பூர் தாசில்தார் சோனை கருப்பையா தலைமையில் அதிகாரிகள் அந்த வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் ஆற்றில் இருந்து மணல் அள்ளிவந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த லாரியை பறிமுதல் செய்து அன்னவாசல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த லாரியின் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.