தீ விபத்து எதிரொலி மோனோ ரெயில் சேவை 2-வது நாளாக நிறுத்தம்


தீ விபத்து எதிரொலி மோனோ ரெயில் சேவை 2-வது நாளாக நிறுத்தம்
x
தினத்தந்தி 11 Nov 2017 4:30 AM IST (Updated: 11 Nov 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

தீ விபத்து எதிரொலியாக மும்பையில் மோனோ ரெயில் சேவை நேற்று 2-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டது.

மும்பை,

தீ விபத்து எதிரொலியாக மும்பையில் மோனோ ரெயில் சேவை நேற்று 2-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தீப்பிடித்த மோனோ ரெயில்

நாட்டிலேயே மும்பையில் தான் மோனோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது செம்பூர்- வடலா இடையே மோனோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சேவைகளை தினசரி 20 ஆயிரம் பயணிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மோனோ ரெயில் சேவை நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

இந்தநிலையில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல நேற்றுமுன்தினம் அதிகாலை மைசூர்காலனி மோனோ ரெயில் நிலையத்தில் காலியாக வந்து கொண்டிருந்த மோனோ ரெயில் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

பயணிகள் அச்சம்

இந்த தீ விபத்தில் அந்த மோனோ ரெயிலின் இரண்டு பெட்டிகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. மின்கசிவே இதற்கு காரணம் என தெரியவந்து உள்ளது. மோனோ ரெயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. அந்தரத்தில் செல்லும் மோனோ ரெயிலில் பயணிகள் இருக்கும் போது, இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டிருந்தால் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என மும்பைவாசிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

மோனோ ரெயில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தின் காரணமாக நேற்றுமுன்தினம் முழுவதும் மோனோ ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது.

பாதுகாப்பு சோதனை

தீப்பிடித்து எரிந்த ரெயிலும் அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்றும் அந்த மோனோ ரெயில் அங்கிருந்து அகற்றப்படவில்லை. இதன் காரணமாக நேற்று மோனோ ரெயில்கள் இயக்கப்படவில்லை. 2 நாட்களாக மோனோ ரெயில் சேவை முடங்கி உள்ளது.

இது குறித்து மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “அனைத்து மோனோ ரெயில்களிலும் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை முடிந்த பின்னா தான் மோனோ ரெயில்களை இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும்” என்றார்.

Next Story