மந்திராலயாவின் 7–வது மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயியால் பரபரப்பு


மந்திராலயாவின் 7–வது மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயியால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Nov 2017 4:00 AM IST (Updated: 11 Nov 2017 3:42 AM IST)
t-max-icont-min-icon

மந்திராலயாவின் 7–வது மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

மந்திராலயாவின் 7–வது மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை மிரட்டல்

மும்பை நரிமன்பாயிண்டில் உள்ள மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயாவுக்கு நேற்று வந்த வாலிபர் ஒருவர், வேகமாக 7–வது மாடிக்கு சென்றார். பின்னர் அங்கு நின்று கொண்டு கீழே குதிக்கப்போவதாக சத்தமாக கூறினார். அவரது கையில் கண்ணாடி துண்டு ஒன்றும் இருந்தது. இதைப்பார்த்து மந்திராலயா வளாகத்தில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர்.

போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். போலீசார் அந்த வாலிபரை கீழே இறங்கும்படி கூறினார்கள். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்து, யாராவது மேலே வந்தால் கண்ணாடி துண்டால் கையை அறுத்துக்கொண்டு, குதித்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனால் தீயணைப்பு படையினர் அவர் கீழே குதித்தால் தாங்கி பிடித்து கொள்வதற்காக பெரிய வலையை பிடித்தபடி நின்றனர்.

மந்திரி பேசினார்

இந்தநிலையில், அந்த வாலிபர் ஒரு தாளில் தனது செல்போன் எண்ணை மட்டும் எழுதி வீசினார். அந்த எண்ணில் போலீசார் அவரை தொடர்புகொண்டு பேசினார்கள். அப்போது அவர், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், வேளாண்துறை மந்திரி பாண்டுரங் பன்ட்கர் ஆகியோர் வந்து தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் தான் இறங்குவேன் என்று கூறினார். ஆனால் மந்திராலயாவில் முதல்–மந்திரியோ, மந்திரிகளோ இல்லை என போலீசார் கூறினர்.

இந்தநிலையில், இது குறித்து தகவல் அறிந்து மந்திரி வினோத் தாவ்டே அங்கு விரைந்து வந்தார். அவர் அந்த நபரிடம் கீழே இருந்தபடியே போனில் பேசினார். பின்னர் ஒரு வழியாக அந்த வாலிபர் கீழே இறங்கினார்.

விவசாயி

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் உஸ்மனாபாத்தை சேர்ந்த விவசாயி ஆனந்த் சல்வே என்பது தெரியவந்தது.

பருத்தி மற்றும் சேயாபீன்ஸ் பயிரிட்டு இருந்ததாக கூறிய அவர், அவற்றின் விலைவீழ்ச்சி காரணமாக தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திராலயா வந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினார்.

மந்திராலயா மாடியில் நின்று விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.


Next Story