பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்


பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்
x
தினத்தந்தி 11 Nov 2017 11:05 AM IST (Updated: 11 Nov 2017 11:05 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா கூறினார்.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சிவகங்கை மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான ‘பள்ளியை தரப்படுத்துதலும் மற்றும் மதிப்பிடலும்’ என்ற தலைப்பில் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. பல்கலைக்கழக கல்வியியல் துறை மற்றும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககம் சார்பில் இந்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா தலைமை தாங்கி கூறியதாவது:-

எந்த ஒரு செயலையும் தரப்படுத்த வேண்டுமானால் அவற்றை சரியாக திட்டமிட வேண்டும். அவ்வாறு திட்டமிடாத செயல், நிரந்தரமான பயனை தராது. பள்ளிகள் தங்களை தரப்படுத்திக்கொள்ள, தற்போதைய நிலையை நன்றாக உணர்ந்து சுயமதிப்பீடு செய்ய வேண்டும். சுயமதிப்பீடு இருந்தால் தான் பள்ளிகள் வளரும், அதோடு சமுதாய பங்கேற்பாளர்களும் அதிகரிப்பார்கள். இந்தியா எப்போதும் தரமான கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் தொடங்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தில் 1:5 என்ற விகிதத்தில் ஆசிரியர்-மாணவர் சேர்க்கை இருந்துள்ளது. அப்போதே 10 ஆயிரம் மாணவர்கள் தங்கி படிக்கக்கூடிய அளவில் கட்டமைப்பு வசதியும், தரமான கல்வியும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல கோடி ரூபாய் ஒதுக்கி தரத்தை உயர்த்துகிறது. எனவே அதற்கு ஏற்றாற்போல் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளியின் தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story