ஏரியூர் மலைப்பாதையில் பயணிகளுடன் ஏற முடியாமல் திணறும் அரசு பஸ்கள்


ஏரியூர் மலைப்பாதையில் பயணிகளுடன் ஏற முடியாமல் திணறும் அரசு பஸ்கள்
x
தினத்தந்தி 11 Nov 2017 3:00 PM IST (Updated: 11 Nov 2017 1:50 PM IST)
t-max-icont-min-icon

ஏரியூர் மலைப்பாதையில் பயணிகளுடன் ஏற முடியாமல் திணறும் அரசு பஸ்களால் பொதுமக்கள் இறங்கி நடக்கும் அவல நிலை உள்ளது.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டத்தில் ஏரியூர், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமமக்களின் வசதிக்காக பென்னாகரத்தில் இருந்து மேச்சேரி வரை 3 அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ்கள் சிடுவம்பட்டி, ஏரியூர், மலையனூர், ராமகொண்டஅள்ளி, ஏர்கோல்பட்டி பழையூர் வழியாக இயக்கப்படுகின்றன. இந்த கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு மேச்சேரி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த வழியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இந்த பஸ்கள் மலைப்பாதையில் சின்ன மேடுகளில் கூட ஏறமுடியாமல் பாதி வழியிலேயே நின்று விடுகின்றன. குறிப்பாக வத்தல்பட்டி, புதூர், பழையூர் ஆகிய கிராமங்களில் உள்ள மலைப்பாதையில் பஸ்கள் ஏற முடியாமல் திணறுகின்றன. பயணிகள் அனைவரும் இறங்கி நடந்து செல்கின்றனர். இதனால் மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலையில் வரும் பஸ்சை விட்டால் பின்னர் 3 மணி நேரம் கழித்து தான் அடுத்த பஸ் வருகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியவில்லை. மேலும் பஸ்சுக்காக காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பென்னாகரம் முதல் மேச்சேரி வரை செல்லும் பழுதடைந்து பாதி வழியில் நின்று விடும் அரசு பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story