‘ஏ.சி.’யில் வளர்க்கப்படும் பசுமாடுகள்!


‘ஏ.சி.’யில் வளர்க்கப்படும் பசுமாடுகள்!
x
தினத்தந்தி 11 Nov 2017 5:28 PM IST (Updated: 11 Nov 2017 5:27 PM IST)
t-max-icont-min-icon

பிற அரபு நாடுகளால் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கத்தார், தனது உணவுத் தேவையை தானே பூர்த்தி செய்து கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

பிற அரபு நாடுகளால் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கத்தார், தனது உணவுத் தேவையை தானே பூர்த்தி செய்து கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

அதன் ஓர் அங்கமாக, பசு மாடுகளை ‘ஏ.சி.’ சூழலில் பராமரித்து பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற முயல்கிறது.

27 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்த நாடு, தனது உணவுத் தேவைக்கு பெருமளவில் வெளிநாடுகளைச் சார்ந்திருக்கிறது. அதனால்தான், முதல்கட்டமாக பால் உற்பத்திக்காக ஆயிரக் கணக்கான பசுமாடுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் திட்டத்தில் அந்நாடு இறங்கியுள்ளது.

கடந்த ஜூன் 5-ம் தேதியன்று சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் உடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டன.

அதன்விளைவாக, கத்தாரில் உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக பால் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. வழக்கமாக அவை அனைத்தும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தருவிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

கத்தாருக்கான தரைவழி, சவுதி அரேபியாவால் மூடப்பட்டு விட்டதால், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து விமானம் மூலம் அதிக செலவில் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யவேண்டியுள்ளது.

இந்த நிலை காரணமாக, கத்தார் தனது உணவுத் தேவையை தானே பூர்த்தி செய்ய முயன்று வருகிறது. அதன்படி, பல்தானா என்ற தனியார் பால் பண்ணை, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து 600 பசு மாடுகளை இறக்குமதி செய்துள்ளது.

பாலைவன தேசமான கத்தாரில் அந்த மாடுகள் ஏ.சி. வசதி செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுக்களைப் பராமரிக்கும் வசதியும் செய்யப்பட்டு வருகிறது.

அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜான் ஜோசப் தோர், ‘இந்த ஆண்டு இறுதிக்குள் 3 ஆயிரம் பசுக்களும், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மேலும் 10 ஆயிரம் பசுக்களும் இறக்குமதி செய்யப்படும்’ என்று கூறுகிறார்.

அடுத்த ஆண்டு மே மாத வாக்கில், அங்குள்ள 14 ஆயிரம் பசுக் களும் நாளொன்றுக்குச் சுமார் 300 டன் பால் உற்பத்தி செய்யும் என்றும், இதனால் கத்தார் பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்பட்டு, அங்கு ஒரே சமயத்தில் 100 பசுக்கள் கறவை செய்யும் ஒரு கூடம், 80 பசுக்கள் கறவை செய்யும் மூன்று கூடங்கள் ஆகியவை அமைக்கப்படும். எல்லாப் பணிகளையும் செய்து முடிக்க பல்லாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதற்கு முன் கத்தாரின் 85 சதவீத பால் தேவையை சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் பூர்த்தி செய்துவந்தன. அந்நிலை தற்போது மாறியிருப்பதால், தன் கையே தனக்கு உதவி என்ற நிலைக்கு கத்தார் வந்திருக்கிறது. அதனால்தான் இவ்வளவு பெரிய முயற்சியில் அது இறங்கியிருக் கிறது.

பால் பொருட்களைப் போல தனக்குத் தேவையான காய்கறி களையும் கத்தாரால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள முடியும் என்று கத்தார் விவசாய நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். இப்போதைக்கு அந்நாடு, தனக்கான 80 சதவீத காய்கறிகளை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொண்டிருக் கிறது.

கத்தாரில் சுமார் ஆயிரத்து 400 விவசாயப் பண்ணைகள் இருந்தாலும், அவற்றில் 300 மட்டுமே செயல்படுகின்றன. அதுவும் ஆண்டு முழுதும் அல்லாமல் சில பருவங்களில் மட்டும்தான்.

கத்தாரின் வடக்குப் பகுதியில் உள்ள அக்ரிகோ எனும் பண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆண்டு முழுவதும் இயங்குகிறது.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் கத்தார் பருவநிலை வெப்பமாகவும், வறண்டும் இருப்பதால், அது விவ சாயத்துக்கு ஏற்றதாக இருக்காது என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நாசர் அல்கலாப் கூறுகிறார்.

“ஆண்டு முழுதும் விவசாய உற்பத்தி செய்யத் தொடங்கிய கத்தாரின் முதல் பண்ணை எங்களுடையதுதான். பல ஆண்டுகள் அறிவியல் சோதனைகள் செய்த நாங்கள், இதை வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறோம்” என்கிறார்.

ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ள அந்தப் பண்ணையில், தக்காளி, வெங்காயம், காளான், பழங்கள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன.

உள்நாட்டு வேளாண் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க இத்தகைய முயற்சிகளை ஊக்குவிக்க அரசு முடிவு செய்திருப்பதாக அவர் கூறுகிறார்.

“எங்கள் தொழில்நுட்பத்தை நாங்கள் அரசுடன் பகிர்ந்துகொள்கிறோம். பிற பண்ணைகளும் அதைச் செய்கின்றனர் என்று நான் நம்புகிறேன். சில ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் எங்களால் எங்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்ய முடியும்” என்று அல்கலாப் கூறுகிறார்.

நிஜத்தில் கத்தார், காய்கறி உற்பத்தியில் தன்னிறைவு பெற சுமார் 35 ஆண்டுகள் ஆகும் என்று கருதப்படுகிறது. அப்போதும் அவர் களால் எல்லா விளைபொருட்களையும் உற்பத்தி செய்ய முடியாது. அதிக நீர் தேவைப்படும் கரும்பு, சோளம் போன்றவற்றை அவர் களால் உற்பத்தி செய்ய இயலாது.

விவசாயப் பொருட்களைச் சேமித்துவைக்கும் கிடங்குகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கவும் கத்தார் முயல்கிறது. அம்மாதிரியான கிடங்குகளைக் கட்ட தனியார் நிறுவனத்துக்கு கத்தார் அரசு ஒப்பந்தம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கிடங்குகளில், 30 லட்சம் மக்களுக்கு, இரண்டு ஆண்டு களுக்குத் தேவையான உணவைச் சேமித்து வைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பாரம்பரியமாக விவசாய நாடுகள் அல்லாதவை கூட விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை கால் பதிக்கையில், நாம் விவசாயத்தைவிட்டு விடைபெற்றுக்கொண்டிருக்கிறோம். 

Next Story