நெல்லையில், இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மேடை அமைக்கும் பணியை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு
நெல்லையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி மேடை அமைக்கும் பணியை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று ஆய்வு செய்தார்.
நெல்லை,
தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி காலையில் எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சி நடக்கிறது. புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்.
மாலை 3 மணிக்கு விழா தொடங்குகிறது. விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
விழாவிற்கான மேடை அமைக்கும் பணியை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று காலை பார்வையிட்டார். அவர் நுழைவு வாயில் மற்றும் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சி அமைக்கும் பணிகள், நலத்திட்டம் பெற வருகிறவர்களுக்கான இருக்கை வசதி செய்யப்பட்டவை உள்ளிட்ட விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், கே.ஆர்.பி.பிரபாகரன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தர்மலிங்கம், கோபாலகிருஷ்ணன், சுப்பையாபாண்டியன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் தச்சை கணேசராஜா, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, சிறுபான்மை பிரிவு செயலாளர் கபிரியேல் ஜெபராஜன், துணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் மருதூர் ராமசுப்பிரமணியன், அருள்வேல்ராஜன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், அரசு வக்கீல் சிவலிங்கமுத்து, பகுதி செயலாளர்கள் தச்சை மாதவன், மோகன், ஹயாத், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ், வக்கீல் ஜெனி, புறநகர் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை மற்றும் செய்தி மக்கள் தொடர்புதுறை இணை இயக்குனர் சண்முகசுந்தரம், துணை இயக்குனர் கண்ணதாசன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.